நார்வே மருத்துவமனையின் சுவர்களை நீண்டகாலம் அலங்கரித்த ஒரு ஓர் அரிய ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.
அந்த அரிய ஓவியம் புகழ்பெற்ற இந்திய ஓவியர் எம்எஃப் ஹுசைனின் கைவண்ணத்தில் உருவானது என்பது 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது.
‘கிராம் யாத்ரா’ அதாவது கிராமப் பயணம் என்று அழைக்கப்படும் 14 அடி அகலம் கொண்ட ஓவியம், இந்தியாவின் கிராமத்து வாழ்க்கையை முன்னிறுத்துகிறது.
பூமியைப் பிரதிபலிக்கும் வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியம், கிராமத்தில் உள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கையில் செய்யும் சமையல் போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறது.
ஹுசைனின் அரிய வகை ஓவியம் டில்லியிலிருந்து நார்வேயின் ஓஸ்கோ வரைக்கும் எப்படி சென்றது?
உக்ரேனிய மருத்துவரான லியொன் இலாயஸ் வொலொடர்ஸ்கி 1954ஆம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவனத்தின் பணிக்காக இந்தியாவில் இருந்தபோது $295 டாலருக்கு ஓவியத்தை வாங்கினார்.
டாக்டர் லியொனால் பின்னர் நார்வேக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஓவியம், ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையின் சுவரை அலங்கரித்தது.
காலப்போக்கில் கலை உலகத்தால் மறக்கப்பட்ட ஓவியம் திரு ஹுசைனின் மறைவுக்குப் பின் ஈராண்டு கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2013ஆம் ஆண்டு பிரிட்டனில் கலைப்பொருள்களை ஏலத்துக்கு விடும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஓவியம் பற்றி தகவல் கிடைத்தது. அதையடுத்து நியூயார்க்கில் கடந்த வாரம் ஏலத்துக்கு வந்த திரு ஹுசைனின் ஓவியம் $13.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.
இதற்குமுன் ஆக அதிக விலைக்கு ஏலத்தில் சென்ற இந்திய ஓவியத்தின் சாதனையை திரு ஹுசைனின் ஓவியம் முறியடித்தது. 2023ஆம் ஆண்டு அம்ரிதா ஷெர்-கில்லின் ‘த ஸ்டொரி டெல்லர்’ (The Story Teller) ஓவியம் $7.4 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.
இந்தியாவில் நவீனத்துவத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் திரு ஹுசைன் இந்தியக் கலைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். அவர் 2011ஆம் ஆண்டு 95 வயதில் காலமானார்.