யங்கூன்: ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியன்மார் அரசு இனப்படுகொலை நடத்தியதாக ஐநா அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ‘பொருத்தமற்ற’ அம்சங்களை மியன்மார் பின்பற்றாது என்று அந்நாட்டின் தலைவர் மின் ஆங் ஹ்லாய்ங் புதன்கிழமை (நவம்பர் 25) தெரிவித்துள்ளார்.
“பொறுப்புள்ள நாட்டிற்கு ஏற்ற நடவடிக்கைகளை மியன்மார் எடுக்கும். ஆனால் பொருத்தமற்றதாகக் கருதும் நிபந்தனைகளுக்கு இணங்காது,” என்று கூட்டமொன்றில் பேசிய ராணுவ ஆட்சியாளராக இருந்து அதிபராகப் பொறுப்பேற்ற மின் ஆங் ஹ்லாய்ங் கூறினார்.
அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முதன்முறையாகப் பொதுவெளியில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வழக்கை மியன்மாருக்கு எதிரான “ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு. இனப்படுகொலை என்ற சொல் நாட்டின் நற்பெயருக்குக் கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் சாடினார்.
மேற்கு ரக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒடுக்குமுறையின்போது, மியன்மார் படைகள் ரோஹிங்கியா பொதுமக்களைத் திட்டமிட்டுக் கொன்றதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சொத்துகளை அழித்ததாகவும் அனைத்துலக நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவோர் மீது வழக்குத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி, வங்காளதேசத்திற்குத் தப்பியோடிய 700,000க்கும் மேற்பட்ட அகதிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வகைசெய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அனைத்துலக நீதிமன்றத்தின் 80 ஆண்டுகால வரலாற்றில், ஒரு நாடு இனப்படுகொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை. இழப்பீட்டுத் தொகை, வழிமுறைகளை நிர்ணயிக்க மியன்மாருக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயுதக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்ததாக மியன்மார் கூறிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. நீதிமன்றத் தீர்ப்புகள் கட்டுப்படுத்தக்கூடியவை என்றாலும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
