மியன்மார் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் பேங்காக்கில் நடைபெற்ற வாக்குப்பதிவு

1 mins read
9deaf974-ecca-44ce-8198-53812fc4acd7
மியன்மாரில் தேர்தல் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அயல்நாட்டில் உள்ள மியான்மர் குடிமக்களுக்கான வாக்குப்பதிவு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. - படம்: இணையம்

பேங்காக்: மியன்மார் தேர்தலில் வாக்களிக்க அயல்நாட்டில் உள்ள மியன்மார் குடிமக்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், கடும் அதிருப்தியுடன் பலர் பேங்காக்கில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருவதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின்போது, மியன்மாரின் ராணுவ ஆட்சிக் குழு அந்நாட்டை ஆளும் அதிகாரத்தைப் பறித்தது.

இதனால் உள்நாட்டுப் போரில் மூழ்கியது. இதற்கிடையே, ஜனநாயகத்தின் பாதையில் நாட்டை முன்னெடுக்க உறுதியளிக்கும் இலக்குடன் இத்தேர்தல் நடைபெறுவதாக மியன்மார் கூறியது.

மியன்மாரின் முதற்கட்ட பொதுத் தேர்தல் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சியான எம்ஆர்டிவி ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் சில பகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாங்காங், சிங்கப்பூர், பேங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சில மியன்மார் தூதரகங்களில் வாக்களிப்பு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி காலைப் பேங்காக் தூதரகத்தில் வாக்களிப்பை முன்னிட்டு காவல்துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சின் அறிக்கையின்படி, தலைநகர் பேங்காக்கில் தகுந்த ஆவணங்களுடன் வசிக்கும் மியன்மார் நாட்டினரின் எண்ணிக்கை ஏறத்தாழ அரை மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புச் சொற்கள்