பேங்காக்: தாய்லாந்தின் அண்டை நாடான மியன்மாரில் இருந்து கடத்தப்படும் சட்டவிரோத போதைப்பொருள்களும் குறிப்பாக, மேலும் மெத்தம்ஃபேட்டமின், ஹெராயின் கைப்பற்றல்களும் அதிகரித்துள்ளன.
மியன்மாரின் உள்நாட்டுப் போரே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்று தாய்லாந்தின் மூத்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வடக்குப் பகுதி தாய்லாந்தின் முக்கிய கடத்தல் பாதையாக உள்ளது. கடத்தல்கார்கள் மலைகள் வழியாக அல்லது மெக்கோங் ஆற்றின் வழியாக மெத்தம்ஃபெட்டமின் மாத்திரைகளையும் ஐஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தையும் கொண்டு வருவார்கள்,” என்று தாய்லாந்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (ஓஎன்சிபி) துணைத் தலைமைச் செயலாளர் அப்பிகிட் ரோஜ்பிரசெத் தெரிவித்தார்.
இதற்கு கருத்து தெரிவிக்க ராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மறுத்துவிட்டார். ஆனால் மியான்மார் முன்னர் போதைப்பொருள் கடத்தலைச் சமாளிக்க அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட உறுதியளித்திருந்தது.
“ஆயுதமேந்திய மோதல் காரணமாக, போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதங்களை வாங்குவதற்கு அல்லது சண்டையிடும் படைகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் காரணிகளில் ஒன்றாகும்,” என்று திரு அப்பிகிட் ராய்ட்டர்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, மூன்று வடக்கு தாய்லாந்து மாகாணங்களில் போதைப்பொருள் கைப்பற்றல்கள் அனைத்தும் அதிகரித்துள்ளன. கிரிஸ்டல் மெத் 284%, எம்பெட்டமின் மாத்திரைகள் 201%, ஹெராயின் 77% அதிகரித்துள்ளன என்று ஓஎன்சிபி தரவு காட்டுகிறது.

