சுபாங்: மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
மலேசியாவின் சிறப்பு பேரிடர் நிவாரண, உதவிக் குழுவானது ராணுவ, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரை உள்ளடக்கியது. இவர்கள் அனைவரும் இரண்டு லாரிகள், ஒரு ஹைலக்ஸ் வாகனம், தேடுதல், மீட்புக் கருவிகள், மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றை இரண்டு ராணுவ விமானங்களில் ஏற்றிக்கொண்டு மியன்மாருக்கு சுபாங் விமான தளத்திலிருந்து கிளம்பினர்.
ஆசியான் வட்டார அமைப்பிற்கு இவ்வாண்டு மலேசியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. எனவே மியன்மார் நிலவரம் குறித்து மலேசியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி தெரிவித்தார்.
மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு ஆசியான் அமைப்பின் மனிதநேய, ஒருமைப்பாட்டு உணர்வை பிரதிபலிக்கும் விதமாக உதவி அளிக்கப்படுவதாக அவர் விளக்கினார்.
இந்நிலையில், மியன்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மலேசியா 10 மில்லின் ரிங்கிட் நிதியுதவி வழங்கும் என்றும் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற திரு அன்வார், இவ்வட்டாரத்தின் ஒருங்கிணைந்த பணிகளுக்கு தமது நாடு பயனுள்ள வகையில் துணை நிற்கும் என்று கூறினார்.

