மருத்துவமனைமீது வான்வழித் தாக்குதல் நடத்திய மியன்மார் ராணுவம்; 31 பேர் பலி

2 mins read
950e44a4-866c-4953-9653-fdacdd2a3965
மியன்மாரில் அந்நாட்டு ரானுவம் புதன்கிழமையன்று நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைமீது அந்நாட்டு ராணுவம் மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

புதன்கிழமையன்று (டிசம்பர் 10) நடந்த அத்தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறநிறுவனப் பணியாளர் ஒருவர் வியாழக்கிழமை (டிசம்பர் 11) கூறினார்.

மியன்மாரில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் 2021ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதிலிருந்து, அவர்களை எதிர்க்கும் போராளிகளை அழிப்பதற்கு அடிக்கடி ஆகாயவழித் தாக்குதல்களை ராணுவம் நடத்துகின்றது.

டிசம்பர் 28ஆம் தேதி, தேர்தல் நடத்த அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பங்ளாதேஷ் எல்லையை ஒட்டியுள்ள ரக்கைன் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் மராக்-யு பொது மருத்துவமனைமீது அந்நாட்டு ராணுவம் குண்டு வீசியதாக அறநிறுவனப் பணியாளரான வை ஹுன் ஆங் தெரிவித்தார்.

மேலும், அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் 31 பேர் உயிரிழந்த நிலையில் பலத்த காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை 31 பேர் உயிரிழந்தாகவும் 68 பேர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.

தாக்குதல் குறித்து ராணுவத் தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ரக்கைன் மாநிலம் முழுவதும் அரக்கன் ராணுவம் என அழைக்கப்படும் போராளிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சியின் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கவிழ்ப்பதற்கு முன்பிருந்தே இந்தப் போராளிக் குழு செயல்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 10ஆம் தேதி இரவு ரக்கன் ராணுவத்தின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், இரவு 9 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணி) நடந்த வான்வழித் தாக்குதலில் 10 மருத்துவமனை நோயாளிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்