ரக்கைன்: மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள, அகதி முகாம்கள்மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதல்களில் இரு நாள்களில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரக்கைனின் பொன்னாகியூன் பகுதியில் உள்ள அகதி முகாம் ஒன்றன் மீது ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அறுவர் உயிரிழந்தனர்; மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை காலையில் அதே பகுதியில் உள்ள மற்றொரு முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் மாண்டனர்; மேலும் இருவர் காயமுற்றனர் என்று போராளிக் குழு ஒன்றும் இளையர் சங்கம் ஒன்றும் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இரு முகாம்களிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமே வசித்து வந்ததாக பொன்னாகியூன் இளையர் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சம்பவங்கள் குறித்து மியன்மார் அரசு உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ராணுவம் அதிகபட்சக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அது முன்னர் கூறியிருந்தது.
2021ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை ஏறத்தாழ 100,000 பேர் உயிரிழந்துவிட்டனர்; 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
