புதிய ஆதாரம்: நஜிப் வழக்கில் திடீர் திருப்பம்

1 mins read
7e66896c-5601-497d-8f23-ba108e2ddf9b
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: புதிய ஆதாரத்தை அறிமுகம் செய்ய முயன்றதால் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கில் வியாழக்கிழமை (டிசம்பர் 5) திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடங்குவதாக இருந்த விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நஜிப்பின் மகன் நிஸார் நஜிப் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த புதிய வாக்குமூலத்தை ஆராய போதுமான அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

1எம்டிபி அரசாங்க நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் ஆறாண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் நஜிப்.

பாகாங் சுல்தான் இதற்கு முன்னர் மாமன்னராக இருந்தபோது, சிறைக் காலத்தின் ஒரு பகுதியை வீட்டுக் காவலில் கழிக்க தமது தந்தைக்கு அனுமதி வழங்கியதற்கான ஆதாரம் இருப்பதாக நிஸார் நஜிப் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மன்னரின் உத்தரவு அடங்கிய பிற்சேர்க்கை, பாகாங் அரண்மனையில் இருந்து திங்கட்கிழமை வந்ததாகவும் அதன் அடிப்படையில், அதற்கு மறுநாள் நிஸார் நஜிப் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் நஜிப்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஷாஃபீ அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறினார்.

மாமன்னர் பொறுப்பில் இருந்து விலகுமுன்னர் இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி நஜிப்பின் தண்டனைக் காலத்தை 12 ஆண்டுகளில் இருந்து ஆறாண்டாகவும் அபராதத் தொகையை 210 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைத்து முன்னாள் மாமன்னர் உத்தரவிட்டு இருந்தார்.

குறிப்புச் சொற்கள்