நாடு தழுவிய ‘மைசைரன்’ சோதனை வெற்றி: மலேசிய அமைச்சர்

நாடு தழுவிய ‘மைசைரன்’ சோதனை வெற்றி: மலேசிய அமைச்சர்

படம்: மலாய் மெயில்

29 Nov 2026 - 6:06 pm

1 mins read

பூச்சோங்: தேசிய முன்னெச்சரிக்கை முறையின் (மைசைரன்) சோதனை எச்சரிக்கைகள் மலேசியா முழுவதும் உள்ள கைப்பேசிகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சென்றடைந்ததாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) காலை சோதனை நடத்தப்பட்டது.

பெர்லிசின் பாடாங் பெசார், சாபாவின் புலாவ் செபாத்திக், தாவாவ் உள்ளிட்ட இடங்களிலிருந்து உடனுக்குடன் தகவல்கள் கிடைத்தன.

சோதனைக்குப் பின்னர் மலேசியச் சிறப்புப் பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஃபாஹ்மி பேசினார்.

“மலாய், ஆங்கில மொழிகளில் எச்சரிக்கைச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. குறுஞ்செய்தி முறையோ பயனர் தகவல்களோ இன்றி, ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் அலைப்பரப்பி எல்லைக்குள் உள்ள கைப்பேசிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை அனுப்பப்பட்டது,” என்று அவர் கூறினார்.

24 மணி நேரமும் செயல்படும் ‘மைசைரன்’, வடகிழக்குப் பருவமழையில் ஆற்று நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டும்போது கரையோர மக்களை எச்சரிக்க உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பேரிடர் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், இரவிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உரத்த ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கைப்பேசி மென்பொருளைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அமைச்சர், ‘மைசைரன்’ என்ற செயலி எதுவும் இல்லை என்பதால் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்