காத்மாண்டு: பல ஆண்டுகளாக ஊழலில் சிக்கித் தவித்துவந்த 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இமாலய நாடான நேப்பாளத்தை மீட்க கடந்த செப்டம்பர் மாதம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்து ஆட்சிக் கவிழ்ப்பும் நிகழ்ந்தது.
அதன்பிறகு புதிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தேர்தல் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு நடக்கவிருக்கும் முதல் வாக்கெடுப்பில் பங்கெடுக்க பல்லாயிரக் கணக்கானோர் பதிவு செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளனர்.
மொத்தம் 837,094 என்ற எண்ணிக்கையில் முதல்முறை வாக்களிப்போரின் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையப் பேச்சாளர் நாராயண் பட்டாராய் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 21ஆம் தேதி வரையில் 123 அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அடுத்த 2026ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பதிவுசெய்துள்ளதையும் திரு நாராயண் குறிப்பிட்டார். இன்னும் 40 புதிய கட்சிகள் போட்டியிடும் தகுதிகள் ஆராயப்படுவதாகவும் அவர் கூறினார்.
இளையோரிடையே அவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் பலன் நாட்டுக்குக் கிடைக்கவேண்டும் என்ற ஆர்வம் கூடியுள்ளதை புதிய வாக்காளர் எண்ணிக்கையை வைத்து உணர முடியும்.
சமூக ஊடகத்தை அப்போதைய அரசாங்கம் தடை செய்ததால் ஆர்ப்பாட்டம் வெடித்தது. அது சில நாள்களிலேயே நாடுதழுவிய நிலையை எட்டியது. ஆர்ப்பாட்டங்களில் வெடித்த வன்முறையில் 76 பேர் உயிரிழந்தனர்.
நாடாளுமன்றத்துடன் அரசாங்க அலுவலகங்களும் நீதிமன்றமும் தீக்கிரையாயின. நான்கு முறை பிரதமர் பதவி வகித்த 73 வயது கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே தள்ளாடிவந்த நேப்பாளப் பொருளியல், ஆர்ப்பாட்டத்தால் மிகவும் வலுவிழந்துள்ளது. அரசியல் மற்றும் பொருளியல் நிலையின்மை தொடர்ந்தால், நாட்டின் வளர்ச்சி 2.1 விழுக்காடு பின்தங்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

