கோலாலம்பூர் விமான நிலையச் சன்னலில் ஏறிய நேப்பாள ஆடவர்

கோலாலம்பூர் விமான நிலையச் சன்னலில் ஏறிய நேப்பாள ஆடவர்

படங்கள்: மலாய் மெயில்

29 Nov 2026 - 12:52 pm

2 mins read

சிப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் துணை வளாகக் கட்டடத்தில் உள்ள சன்னலில் ஏறிய 50 வயது நேப்பாள ஆடவர், மனநலச் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அரைக்கால் சட்டை அணிந்திருந்த அந்த ஆடவர், சனிக்கிழமை (நவம்பர் 28) மாலை 4.56 மணியளவில் சன்னலில் ஏறுவதற்கு முன்பு, அனைத்துலகப் புறப்பாட்டு வாயில் ஜி6 அருகே சத்தமிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம்.ரவி கூறினார்.

முனையப் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆடவரை அமைதிப்படுத்தி, கீழே இறங்கச் செய்து முதலாம் முனையக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நேப்பாளத்திற்கு விமானம் மூலம் திரும்பவிருந்ததும் பல மாதங்களாக மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பெற மறுத்துவிட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஆடவரின் நண்பர் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்காக அந்த ஆடவர் காஜாங் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து நேப்பாளத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திரு ரவி சொன்னார்.

குறிப்பாக, முதலாம், இரண்டாம் முனையங்களில் இருப்போரிடையே தவறான தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இச்சம்பவம் குறித்த ஊகங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட பல காணொளிகளில், அந்த ஆடவர் கட்டடச் சன்னலில் ஏறுவது பதிவாகியுள்ளதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்