சான் ஃபிரான்சிஸ்கோ: ஊழியர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் பணியை எளிமைப்படுத்தும் இலக்கைப் புதிய செயற்கை நுண்ணறிவுத் தளம் கொண்டுள்ளது.
இந்தத் தளம் ‘செயல்பாட்டு முகவர்’ என்று அழைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் உட்பட உலகளாவிய நிறுவனங்களும் இந்தப் புதிய தளத்தைப் பயன்படுத்தி தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்.
இத்தளத்தை மனிதவள, நிதித் தளமான வொர்க்டே அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர் மதிப்புப் பணிகளில் கவனம் செலுத்த முதலாளிகளுக்கு இத்தளம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, மறுஆய்வு செய்வது சவால்மிக்கது என்றும் அதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்றும் வொர்க்டே நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பீட்டர் பைலிஸ் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்தார்.
எனவே, இத்தளம் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.