நிதி நிறுவனம் பின்வாங்கியதால் இந்தோனீசியாவின் புதிய தலைநகர் நுசந்தாராவுக்குப் புதிய சவால்கள்

நிதி நிறுவனம் பின்வாங்கியதால் இந்தோனீசியாவின் புதிய தலைநகர் நுசந்தாராவுக்குப் புதிய சவால்கள்

படம்: ஏஎஃப்பி

26 Nov 2026 - 4:34 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகரை நுசந்தாராவுக்கு மாற்றும் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் முதன்மைத் திட்டம் புதிய சவால்களை எதிர்நோக்குகிறது.

முக்கிய நிதி நிறுவனம் ஒன்று அங்குத் தனது அலுவலகத்தைக் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு ஜகார்த்தாவைத் தேர்ந்தெடுத்துள்ளதே அதற்குக் காரணம்.

‘டிபோசிட் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்பிஎஸ்) எனும் அந்த நிதி நிறுவனம், வங்கி வைப்புத்தொகைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் நலிவடைந்த வங்கிகளையும் கையாள்கிறது. அது, ஜகார்த்தாவில் நிரந்தரக் கட்டடத்தை வாங்குவதற்காகத் தனது 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 1.45 டிரில்லியன் ரூப்பியா (S$102 மில்லியன்) நிதி ஒதுக்கீடு கோரியுள்ளது.

நிதி அமைச்சு, மத்திய வங்கி, நிதிச் சேவைகள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்தோனீசியாவின் நிதி அமைப்பு முறையின் நிலைத்தன்மையைக் கட்டிக்காக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள நான்கு முக்கிய நிறுவனங்களில் எல்பிஎஸ் நிறுவனமும் ஒன்று.

நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட விசாரணையின்போது, அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மாறியதே அந்த முடிவுக்குக் காரணம் என்று எல்பிஎஸ் தலைவர் அங்கிட்டோ அபிமன்யு குறிப்பிட்டார்.

அவர் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை அதிபர் பிரபோவோவின்கீழ் துணை நிதியமைச்சராகப் பணியாற்றினார்.

“கடந்த ஆண்டில், ‘ஐகேஎன்’ (நுசந்தாரா தலைநகர்) நகரில் கட்டடம் கட்டுவதற்காக 400 பில்லியன் ரூப்பியா ஒதுக்கியிருந்தோம். இருப்பினும், புதிய நிர்வாகத்தின்கீழ் ‘ஐகேஎன்’ இனி அரசாங்கச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்காது,” என்று நிதி விவகாரங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழுவிடம் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட விளக்கத்தில், நுசந்தாராவுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையற்ற தகவல்களை வழங்கியதை ‘எல்பிஎஸ்’ ஒப்புக்கொண்டது. அதோடு, அத்திட்டத்திற்கான தனது ஆதரவையும் அது மீண்டும் உறுதிப்படுத்தியது.

தற்போது ஜகார்த்தாவில் வாடகை இடத்தில் செயல்பட்டுவரும் அது, அங்கு நிரந்தர அலுவலக வளாகத்தை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் தனது முடிவுக்கு, செயல்பாட்டுத் தேவைகளையும் வரவுசெலவுச் சிக்கனத்தையும் காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்