ஜூலை முதல் புதிய மலேசிய கடப்பிதழ் வழங்கும் திட்டம்

ஜூலை முதல் புதிய மலேசிய கடப்பிதழ் வழங்கும் திட்டம்

நாடு முழுவதும் 14 கடப்பிதழ் அலுவலகங்கள்
படம்: த ஸ்டார்

30 Jun 2026 - 3:59 pm

2 mins read

கோலாலம்பூர்: 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசிய அனைத்துலக கடப்பிதழ், புதன்கிழமை (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் உள்ள 14 கடப்பிதழ் அலுவலகங்களில் முதல் கட்டமாக வழங்கப்படும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 30), நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடங்கி வைக்கப்பட்ட புதிய கடப்பிதழ் அறிமுக விழாவில் பேசிய ஸக்காரியா, இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் அலுவலகங்களில் கட்டங்கட்டமாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

ஜூலையில் தொடங்கும் முதல் கட்டத்தில், அரசு அலுவலகங்கள், நகர்ப்புற உருமாற்ற மையங்கள் (யுடிசி) உட்பட 14 கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் ஈடுபடுத்தப்படும் என்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் தொடங்கும் இந்த முதல் கட்டம், நாடு முழுவதும் உள்ள 14 கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களை உள்ளடக்கியது. மேலும், குடிநுழைவு அலுவலகங்களில் கட்டம் கட்டமாகக் கடப்பிதழ் வழங்கும் பணி தொடங்கும்.

“எங்கள் திட்டத்தின்படி, இந்த மாதம் முதல் ஆகஸ்ட் வரை, இந்தத் திட்டம் ஏழு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

புதிய மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ் அறிமுக விழாவில் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயிலும் கலந்துகொண்டார்.

இந்தப் புதிய கடப்பிதழ், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.

10 ஆண்டுகால கடப்பிதழின் விலை 350 ரிங்கிட் ($111.21) ஆகவும், ஐந்து ஆண்டுகால கடப்பிதழின் விலை 200 ரிங்கிட் ஆகவும் உள்ளது.

மலேசியா, 1998ஆம் ஆண்டிலேயே மின் கடப்பிதழ் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், இதனை அறிமுகப்படுத்திய ஆரம்பகால நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

தற்போதைய பதிப்பில் 49 பாதுகாப்பு அம்சங்கள் உள்ள நிலையில், புதிய கடப்பிதழில் 94 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், அது மிகவும் பாதுகாப்பானதாகவும், போலியாக உருவாக்குவது கடினமானதாகவும் உள்ளது என்று ஸக்காரியா ஷாபான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கடப்பிதழ்குடிநுழைவுபாதுகாப்பு