நியூசிலாந்து ஆளுங்கூட்டணி நாடாளுமன்றப் பெரும்பான்மையை நூலிழையில் தவறவிட்டது

நியூசிலாந்து ஆளுங்கூட்டணி நாடாளுமன்றப் பெரும்பான்மையை நூலிழையில் தவறவிட்டது

படம்: ராய்ட்டர்ஸ்

27 Nov 2026 - 4:19 pm

2 mins read

வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆளும் வலதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றப் பெரும்பான்மையை நூலிழையில் தவறவிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியான இறுதித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இதனால், பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் ஆட்சியில் நீடிக்க நடுநிலைக் கட்சியான ‘ஆப்பர்சுனிட்டி’ கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. கூட்டணி அல்லது ஆதரவு வழங்கும் உடன்பாடு எட்டப்படாவிட்டால், மறுதேர்தல் நடத்த நேரிடும்.

இந்நிலையில், முழுப் பதவிக்காலமும் நீடிக்கும் நிலையான அரசாங்கமே மக்களுக்குத் தேவை என்றும் வாக்காளர்களை மீண்டும் வாக்களிப்புக்கு அனுப்ப விரும்பவில்லை என்றும் திரு லக்சன் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் ஆணைய முடிவுகளின்படி, 130 இடங்களைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆளுங்கூட்டணி பெரும்பான்மைக்கு ஓர் இடம் குறைவாக 65 இடங்களைப் பெற்றுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி நடந்த தேர்தலில் தேசியக் கட்சி 40 இடங்களையும் அதன் பங்காளிக் கட்சிகளான ஏசிடி 13 இடங்களையும் ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ 12 இடங்களையும் வென்றன. பெரிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 36 இடங்களைப் பிடித்தது.

புதிதாக ஏழு இடங்களை வென்ற ‘ஆப்பர்சுனிட்டி’ கட்சியின் தலைவர் கியூலே வோங், பெரிய கட்சியான தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார். தனித்துச் செயல்படுவது உட்பட அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

வலுவான பருவநிலை இலக்குகள், ஆழ்கடல் இழுவை மடி மீன்பிடிப்புத் தடை, கடுமையான போட்டி விதிகள், பொது முதலீட்டுக் கொள்கைகள் ஆகியவை கூட்டணியின் திட்டங்களுக்கு முரணாக உள்ளன. இதற்கிடையே, ‘ஆப்பர்சுனிட்டி’ கட்சியுடன் இணைந்து செயல்பட்டால் விரைவில் ஆட்சியமைக்கலாம் என ஏசிடி தலைவர் டேவிட் சீமோர் தெரிவித்தார்.

தொழிற்கட்சி, பசுமைக் கட்சி, டே பாட்டி மாவோரி ஆகிய இடதுசாரிக் கட்சிகளால் ‘ஆப்பர்சுனிட்டி’ ஆதரவுடன் ஆட்சியமைக்க இயலாது; ஆனால், 2017ஆம் ஆண்டைப்போல ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ இணைந்தால் அது சாத்தியமாகும்.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகராக 17 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்த நியூசிலாந்து டாலர் சற்று வலுவடைந்துள்ளது. முதற்கட்ட முடிவுகளில் இரு இடங்கள் முன்னிலை பெற்றிருந்த ஆளுங்கூட்டணி, பதிவான 2,931,604 வாக்குகளில் இடதுசாரிச் சார்புடைய 484,865 சிறப்பு வாக்குகள் இணைக்கப்பட்டதால் பெரும்பான்மையை இழந்தது.

குறிப்புச் சொற்கள்