தைவான் தன்னுடன் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: சீனா சூளுரை

தைவான் தன்னுடன் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: சீனா சூளுரை

படம்: ராய்ட்டர்ஸ்

29 Nov 2026 - 12:57 pm

2 mins read

தைப்பே: தைவான் உள்ளூர்த் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி (டிபிபி) தைப்பே மேயர் பதவியை இழந்தபோதும், அது கட்டுப்படுத்தும் நகரங்கள், மாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.

இந்நிலையில், தைவானைத் தங்களுடன் இணைக்கும் நடவடிக்கை தவிர்க்க முடியாதது எனச் சீனா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) எச்சரித்தது.

தைவானைத் தனது பகுதியாகக் கருதும் சீனா, அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் படைப்பலத்தைப் பயன்படுத்துவதை ஒருபோதும் கைவிடவில்லை. இருப்பினும், சீனாவின் உரிமை கோரலைத் தைவான் நிராகரிக்கிறது.

தேர்தல் முடிவுகளைக் கவனித்ததாகக் கூறிய சீனாவின் தைவானிய விவகார அலுவலகம், தைவான் மக்கள் அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு ஆகியவற்றை விரும்புவதாகத் தெரிவித்தது.

உள்நாட்டு அரசியல் சூழல் மாறினாலும், தைவான் சீனாவின் பகுதிகளில் ஒன்றாகச் சேர்க்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரிவினைவாதச் சக்திகளையும் வெளிநாட்டுத் தலையீடுகளையும் தொடர்ந்து முறியடிப்போம் என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.

இதற்குப் பதிலளித்த தைவானிய அரசு, சீனா தமது ஜனநாயக முறையையும் மக்களின் தேர்வுகளையும் மதித்து, எவ்வித முன்நிபந்தனையுமின்றிச் சமத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

இருப்பினும், தைவானிய அதிபர் லாய் சிங் தே ஒரு பிரிவினைவாதி எனக் கூறி, அவருடன் பேசச் சீனா மறுக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது உள்நாட்டு விவகாரங்களே முக்கியத்துவம் பெற்றன.

ஆயினும், வாக்களிப்புக்கு முன்னதாகத் தைப்பே வேட்பாளர் பூமா ஷென்னைச் சீனா கடுமையாக விமர்சித்ததுடன், நவம்பர் 27ஆம் தேதி தைவானைச் சுற்றிப் போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பியது.

இதற்கிடையே, 2028 அதிபர் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சியான குவோமின்டாங் (கேஎம்டி) தலைவி செங் லி-வுன் தெரிவித்துள்ளார்.

தைசூங் நகரைக் கேஎம்டி இழந்தபோதும், தைப்பே மேயராக சியாங் வான்-ஆன் மீண்டும் வென்றார்.

தைப்பே நகரில் தோற்றபோதும், நாடளாவிய கவனத்தை ஈர்த்த பூமா ஷென், அடுத்த தலைமுறைத் தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாதைவான்தேர்தல்