கொழும்பு: இந்தியாவிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) உடனடியாக இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
அதற்குத் தேவையான சேமிப்புக் கிடங்குகள் இன்னும் கட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) தெரிவித்தார்.
இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்என்ஜி அனுப்பிவைக்கப்படும் என்று இந்தியா கடந்த ஆண்டு அறிவித்தது.
இருநாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி இணைப்பு மேம்படுத்தப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
ஆனால், இதுவரை எல்என்ஜி விநியோகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தியாவிடமிருந்து எல்என்ஜியைக் கொள்முதல் செய்வது தொடர்பாக இலங்கை இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
எல்என்ஜி சேமிப்புக் கிடங்குகளைக் கட்டி முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் எடுக்கும் என்றும் அதன் பிறகுதான் எல்என்ஜி இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்தார்.