மலேசியாவில் இன ஒடுக்குமுறைக்கு இடமில்லை: பிரதமர் அன்வார்

2 mins read
595bd61e-8046-4a9d-a3dd-e3c61c25e030
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் - படம்: புளூம்பெர்க்

பெட்டாலிங் ஜெயா: வசதிகுறைந்தோர், சிறுபான்மையினருக்கு நீதியை வழங்குவதில் மலேசிய அரசாங்கம் சமரசம் செய்யாது. எந்த இனத்தவரும் ஒடுக்கப்படுவதை தமது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“அண்மையில் மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஏற்றுக்கொள்வதோ மன்னிப்பதோ கடினம்,” என்று மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு நடத்திய கிறிஸ்துமஸ் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் சனிக்கிழமை (டிசம்பர் 13) பேசிய அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் இந்தியரா, மலாய்க்காரரா, சீனரா அல்லது பழங்குடியா என்பது முக்கியமல்ல; வெளிப்படையான விசாரணைகள் இடம்பெற வேண்டும்” என்றார் திரு அன்வார்.

நவம்பர் 24ஆம் தேதி மலாக்காவில் மூன்று இந்திய ஆடவர்கள் மீது காவல்துறையினர் மரணதண்டனை பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் திரு அன்வார் கேட்டுக்கொண்டார். மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள அரசியல், பெருநிறுவனத் தலைவர்களிடையே ‘தார்மீகச் சிந்தனை’ குறைந்து காணப்படுவதாகவும் ஊழல் பெரும்பாலும் உலகளவில் பொறுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

“சில நேரங்களில் மதக் கொள்கைகளைப் பற்றி கருத்துகள் தெரிவிப்போம். ஆனால், ஊழலை ஏதோ ஒருவகையில் மன்னிக்கிறோம். ஒதுக்கப்பட்டவர்களின் ஒடுக்குமுறையை பொறுத்துக்கொள்கிறோம். இது மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சினை என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மலாக்கா காவல்துறையினரால் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்துரைத்த காவல்துறைத் தலைவர் துல்கைரி முக்தார், மூவரும் ஒரு காவல்துறை அதிகாரியைக் கத்தியால் தாக்கிய தொடர் கொள்ளையர்கள் என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அக்குற்றம் ஆரம்பத்தில் கொலை முயற்சி என்று விசாரிக்கப்பட்டது. காணொளிப் பதிவு, தடயவியல் சான்றுகள் எம். புஸ்பநாதன், 21, டி. பூவனேஸ்வரன், 24, ஜி. லோகேஸ்வரன், 29, ஆகியோரின் குடும்பங்களுக்கான வழக்கறிஞர்கள் அந்த ஆடவர்கள் “மரணதண்டனை பாணியில்” கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்