டெஹ்ரான்: நோபெல் பரிசு வெற்றியாளர் நர்கீஸ் முகம்மதி ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுப்பவரான அவரை ஈரானிய அதிகாரிகள் முரட்டுத்தனமாய்க் கைதுசெய்ததாக நர்கீஸ் அறநிறுவனம் தெரிவித்தது.
நாட்டின் கிழக்கே உள்ள மஷாட் நகரில் திருவாட்டி நர்கீஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறநிறுவனம் கூறியது.
ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் மனித உரிமையை ஊக்குவித்ததற்காகவும் 2023ஆம் ஆண்டு அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
திருவாட்டி நர்கீஸ் வல்லந்தமாய்க் கைதுசெய்யப்பட்டது குறித்து நோபெல் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை உடனே தெளிவுபடுத்தும்படி அது வலியுறுத்தியது. திருவாட்டி நர்கீஸ் பாதுகாப்போடு இருக்கிறார் என்பதையும் நியாயமாக நடத்தப்படுகிறார் என்பதையும் உறுதிசெய்யுமாறும் ஈரானைக் குழு கேட்டுக்கொண்டது. அவரை எந்த நிபந்தனையுமின்றி உடனே விடுவிக்கும்படியும் அது கோரிக்கை விடுத்தது.
ஈரான் அதுகுறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறியதாகத் தெரியவில்லை.
2021ஆம் ஆண்டிலிருந்து திருவாட்டி நர்கீஸ் கொடுமையான எவின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம், மருத்துவக் காரணங்களுக்காகத் மூன்று வாரம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பல தண்டனைகளை நிறைவேற்ற அவர் மீண்டும் சிறைக்குத் திரும்புவார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அவரின் அண்மைக் கைது நடவடிக்கை, வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிக்கோர்டியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றபோது நடந்ததாகத் தெரிகிறது. அந்த வழக்கறிஞர் சென்ற வாரம் அவரின் அலுவலகத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழு, அவர் எப்படி மரணமடைந்தார் என்பதைக் கண்டறிய தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அவரின் மரணம் நேர்ந்த சூழல் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகக் குழு கூறியது.
கடந்த ஓராண்டில் திருவாட்டி நர்கீஸ், நாடு முழுதும் பல்வேறு ஆர்வலர்களைச் சந்தித்தார். அவர் தலையங்கி அணியவும் மறுத்தார்.
வாழ்நாளில் திருவாட்டி நர்கீஸ், 13 முறை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு 36 ஆண்டுக்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 154 கசையடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் அறநிறுவனம் கூறுகிறது.

