ஓஸ்லோ: நோபெல் பரிசு வெற்றியாளரான வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (படம்), விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மறைந்து வாழ்கிறார்.
திருவாட்டி மச்சாடோவுக்குப் பதில் அவரின் மகள் விருதைப் பெற்றுக்கொள்வார் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஒரே ஒரு முறை மட்டுமே அவரைப் பொது இடத்தில் பார்க்கமுடிந்தது. அவருக்கும் வெனிசுவேலாவின் அதிபர் நிக்கலஸ் மடுரோவுக்கும் இடையில் மோதல் நிலவுகிறது.
விருதை வாங்குவதற்காக 58 வயது திருவாட்டி மச்சாடோ நாட்டைவிட்டு வெளியேறினால், தப்பியோடியவராகக் கருதப்படுவார் என்று அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவாட்டி மச்சாடோ இப்போது எங்கிருக்கிறார் என்பது இன்னமும் தெரியவில்லை.
அவரின் மகள் அனா கொரினா மச்சாடோ விருதைப் பெற்றுக்கொள்வார் என்று நோபெல் நிலையத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விக்கென் தெரிவித்தார். திருவாட்டி மச்சாடோ எழுதிய உரையை மகள் வாசிப்பார் என்றும் அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் போட்டியிடத் திருவாட்டி மச்சாடோ அனுமதிக்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் திரு மடுரோ மோசடி செய்து வென்றதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். அனைத்துலகச் சமூகமும் அவரின் கருத்துக்கு ஆதரவளிக்கிறது. எதிர்த்தரப்பு அதன் வேட்பாளர் திரு எட்முண்டோ கொன்ஸாலெஸ் உரூட்டியா தேர்தலில் வென்றதாகக் கூறுகிறது. நாடு கடந்து வாழும் அவர், இப்போது ஓஸ்லோவில் இருக்கிறார்.
வெனிசுவேலாவுக்கு ஜனநாயகத்தைக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்காகத் திருவாட்டி மச்சாடோவுக்கு அக்டோபர் 10ஆம் தேதி நோபெல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
திரு மடுரோ 2013ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவை ஆட்சி செய்து வருகிறார்.

