கிரீன்லாந்தில் எண்ணெய், கனிமம், எரிவாயு ஆய்வுகள்: டிரம்ப் அறிவிப்பு

கிரீன்லாந்தில் எண்ணெய், கனிமம், எரிவாயு ஆய்வுகள்: டிரம்ப் அறிவிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

14 Oct 2026 - 7:03 pm

1 mins read

வாஷிங்டன்: கிரீன்லாந்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிமங்களைத் தேடும் விரிவான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஆர்க்டிக் பகுதியிலுள்ள அந்தத் தீவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, செப்டம்பரில் இரு நாடுகளின் தலைவர்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா கையெழுத்திட்டது.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏவுகணைப் பாதையில் கிரீன்லாந்து அமைந்துள்ளதால், டிரம்ப் அமைக்கும் ‘கோல்டன் டோம்’ வான்வழித் தற்காப்புத் திட்டத்திற்கு இத்தீவு முக்கியத் தூணாக விளங்குகிறது.

உருகி வரும் பனிப்பாறைகள் புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளைத் திறந்து விடுவதாலும், அங்குள்ள அரிய கனிமப் படிவுகளினாலும் இத்தீவு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

“எளிதில் கிடைக்கக்கூடிய எண்ணெய் உலகிலேயே இங்குதான் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் அமெரிக்கா மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் கிரீன்லாந்து வழியாகவே தடுத்து நிறுத்த முடியும்,” என்று டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் அங்கிருந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின. புதிய ஒப்பந்தத்தின்படி, வடக்கில் ஏற்கெனவே செயல்படும் பிடுஃபிக் தளத்துடன், மேலும் இரு புதிய ராணுவத் தளங்களை அமெரிக்கா அமைக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்கிரீன்லாந்துஅமெரிக்காடென்மார்க்எண்ணெய்இயற்கை எரிவாயுகனிமவளம்டோனல்ட் டிரம்ப்