வாஷிங்டன்: எண்ணெய் விலைகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) சற்றுக் குறைந்தன.
ஒரு வாரகால விலை உயர்வுக்குப் பிறகு, அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாமீது நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலையும் சந்தைகள் கருத்தில்கொண்டதே அதற்குக் காரணங்கள் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை மணி 8:32க்கு, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 74 சென்ட் அல்லது 0.69 விழுக்காடு குறைந்து 105.85 அமெரிக்க டாலராகவும் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியேட் விலை 81 சென்ட் அல்லது 0.86 விழுக்காடு இறங்கி $93.80 அமெரிக்க டாலராகவும் இருந்தது.
ஒரு வாரமாக எண்ணெய் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. வியாழக்கிழமை அது ஒரு வாரகால உச்சத்தை எட்டியது. இரு கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களின் விலைகளும் 5 விழுக்காடு வரை உயர்ந்தன. முடிவில் பிரென்ட் 3.4 விழுக்காடும் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியேட் 2.7 விழுக்காடும் உயர்வைக் கண்டன.
மத்திய கிழக்குப் போரிலிருந்து கட்டங்கட்டமாக விடுபடுவதற்கான பாதையை வகுப்பது குறித்து நியூயார்க்கில் அமெரிக்க, ஈரானிய சமரசப் பேச்சாளர்கள் விவாதித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதும் அதன் மீதான பொருளியல் தடைகளை அமெரிக்கா நீக்குவதும் அதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
“மத்திய கிழக்கில் அண்மையில் ராணுவத் தாக்குதல்கள் நடந்தபோதிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் சற்று மிதமாகவே உள்ளது. தூதரக ரீதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன,” என்று கேசிஎம் டிரேட் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டிம் வாட்டரர் தெரிவித்தார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து, உலகின் எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு முடங்கியுள்ளது.
போர் எப்போது முடியும் என்பதைத் தெரிவுசெய்வது அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்று ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் வியாழக்கிழமை கூறினார்.
