ஜோகூர் பாரு: ஜோகூர் அரசாங்கமும் மலேசியாவின் மத்திய அரசாங்கமும் ரோன் 95 ரக பெட்ரோலை மலேசியர்கள் மட்டும் அனுபவிப்பதை உறுதிசெய்வதில் தீவிரமாக உள்ளது.
மலேசியர்களின் உரிமைகளைக் கீழறுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் தமது அணி பொறுத்துக்கொள்ளாது என்று ஜோகூர் மாநில முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
ரோன் 95 ரக பெட்ரோலை வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்கு விற்பதன் மூலம் சலுகைகளைப் பெற முயல்வோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
ஜோகூர் பாருவில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் சோதனைகளை நடத்தியதையும் திரு ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.
ரோன் 95 ரக பெட்ரோலின் விற்பனை விதிமுறைக்குட்பட்டிருக்கிறதா என்றும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் அதை நிரப்புக்கிறார்களா என்றும் சோதனை செய்யப்பட்டது.
பெட்ரோலுக்கான விலையும் லிட்டருக்கு 2.05 மலேசிய ரிங்கிட் என்ற உச்சவரம்பை மீறாமல் இருப்பதையும் உறுதிசெய்ததாக திரு ஓன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.
மலேசியர்களின் உரிமையைக் காக்க இத்தகைய சோதனை முயற்சிகள் தொடரும் என்ற அவர், மானிய விலையில் பெட்ரோல் விநியோகம் வெளிப்படையாக இருப்பதைப் பொதுமக்களும் தம்முடன் இணைந்து உறுதிசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.
விதிமீறல் போன்றவற்றை கண்டால் அதிகாரிகளிடம் புகாரளிக்கும்படியும் திரு ஓன் ஹஃபிஸ் அறிவுறுத்தினார்.