பெய்ஜிங்: சீனாவில் வங்கிகளின் அருகே இருக்கும் மண்ணைச் சேகரித்துப் பொட்டலமிட்டு லாபமடைய முனைந்துள்ளனர் இணைய வர்த்தகர்கள்.
அதை வாங்கினால் அதிர்ஷ்டமும் வளமும் பெருகும் என்று அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர்.
ஐந்து பெரிய வங்கிகளுக்கு அருகே உள்ள மண் என்று கூறி, ஒரு பொட்டலம் கிட்டத்தட்ட US$ 3 (S$4) முதல் US$120 (S$160) வரை விற்கப்படுகிறது.
சீன வங்கி (Bank of China), சீனத் தொழில்துறை, வர்த்தக வங்கி (, Industrial and Commercial Bank of China), சீன வேளாண் வங்கி (Agricultural Bank of China), சீனக் கட்டுமானத்துறை வங்கி (China Construction Bank), தொடர்புத்துறை வங்கி (Bank of Communications) ஆகியவை அவை.
வங்கிக்கு முன்புறம், வங்கியில் உள்ள செடித் தொட்டிகள், பணம் எண்ணும் இயந்திரங்களின் தூசு என எல்லாவற்றிலிருந்தும் மண் சேகரிப்படுவதாக இணைய விளம்பரங்களை மேற்கோள்காட்டி ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ தகவல் வெளியிட்டுள்ளது.
வங்கிகளுக்கு முன்புறம் உள்ள பசுமையான பகுதிகளிலிருந்து இரவு நேரத்தில் மண் சேகரிக்கப்படுவதாக இணைய வர்த்தகர்கள் சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ நண்பகலில் மட்டும் சேகரிப்பதாகச் சொல்கின்றனர். சிலர் இதை வாங்கினால் ‘999.999’ விழுக்காடு வளமடைவது உறுதி என்று ஆர்வமூட்டுகின்றனர்.
சில இணைய வர்த்தகங்கள் மண் தோண்டப்படும் காணொளியைப் பதிவேற்றம் செய்துள்ளன.
சமூக ஊடகங்களில் இதுகுறித்த தகவல்கள் பரவும் நிலையில் பலரும் இதைக் கிண்டல் செய்தும் கருத்துரைத்துள்ளனர்.

