சிட்னி: ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ், அதன் அவசரத் தொலைபேசிச் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மெல்பர்ன் நகருக்கு அருகே சேவையில் இடையூறு ஏற்பட்டது. ஏறக்குறைய 14,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் புதன்கிழமை (நவம்பர் 26) கூறியது.
நிறுவனத்தின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் இரண்டு மாதத்திற்கு முன்பு மிகப் பெரிய கோளாறு ஏற்பட்டது. அப்போது உரிய நேரத்தில் உதவி கிடைக்காததால் மூவர் மாண்டதாகக் கூறப்பட்டது.
ஆப்டஸ் நிறுவனம், சிங்டெல்லுக்குச் சொந்தமானது. கம்பிவட இழை துண்டிக்கப்பட்டதால் சேவைத்தடை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஆப்டஸ் குறிப்பிட்டது. அதற்கான காரணம் தொடர்ந்து ஆராயப்படுகிறது.
“பயனீட்டாளர்கள், இன்னொரு தொலைபேசிக் கட்டமைப்பிற்குள் இருந்தால் அவசரத் தொலைபேசிச் சேவைகளை நாடலாம். அல்லது வை-ஃபை சேவை மூலமாக அழைக்கலாம்,” என்று ஆப்டஸ் நிறுவனம் அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.
சேவைத் தடங்கலுக்கு நாசவேலையே காரணம் என்று ஆப்டஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஜேன் மெக்நாமரா ‘ஏபிசி ரேடியோ மெல்பர்ன்’ ஊடகத்திடம் கூறினார்.
“கட்டமைப்பிலிருந்து செம்பு அகற்றப்பட்டுள்ளது. நாங்கள் விக்டோரியா காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளோம்,” என்று அவர் சொன்னார்.
கம்பிவடம் துண்டிக்கப்பட்டதற்கான நிழற்பட ஆதாரம் ஆப்டசிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சேவைத் தடங்கல் விரைவில் சரிசெய்யப்படும் என்று திருவாட்டி ஜேன் நம்பிக்கை தெரிவித்தார்.

