ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தான் தாக்குதல்; ஒன்பது குழந்தைகள் பலி

2 mins read
b36a1401-e59a-4d45-928d-325763abcc90
தலிபான் ராணுவத்தினர், குலாம் கான் என்ற பாகிஸ்தானின் குர்புஸ் எல்லைப் பகுதியில் உள்ள சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காட்சி. - படம்:ஏஎஃப்பி

கொஸ்ட், ஆப்கானிஸ்தான்: உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டை கொஸ்ட் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் குண்டுகள் வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது குழந்தைகளும் ஒரு மாதும் உயிரிழந்தனர். இதனை ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கப் பேச்சாளர் சபிஹுல்லா முஜஹிட் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) தெரிவித்தார்.

குனார், பக்டிக்கா மாகாணங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் நான்கு பொதுமக்கள் காயமுற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நேற்று, நள்ளிரவு நேரத்தில் கொஸ்ட் மாவட்டத்தில் உள்ள கெர்ப்சுவோ பகுதியில் படையெடுத்து வந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர் உள்ளூர்வாசியான விலாயட் கானின் வீட்டைக் குண்டுவீசித் தாக்கியதில் ஐந்து ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் ஒரு மாதும் கொல்லப்பட்டு, அந்த வீடு முற்றாக அழிந்துவிட்டது,” என்று அந்தப் பேச்சாளர் இடிபாடுகளின் படங்களுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அலுவலக நேரம் கடந்துவிட்டதால் செய்தி வெளியிடப்பட்டபோது பாகிஸ்தானிய ராணுவத்தையும் வெளியுறவு அமைச்சையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

இச்சம்பவத்துக்கு முதல்நாள் பாகிஸ்தானின் பெஷாவர் மாநிலத்தில் நடந்த இரட்டை தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு ராணுவத்தினர் மரணமடைந்தனர்.

அதற்குப் பிறகு இந்தத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் தலிபான் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, பாகிஸ்தானுடன் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் இரு ராணுவங்களுக்கும் இடையே தொடர்ந்து நடந்துவருகின்றன.

அவற்றில் பலர் காயமடைந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

அதே அக்டோபர் மாதம் தோஹாவில் போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இரு நாடுகளாலும் செய்யப்பட்டாலும் துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போராளி அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படுவதே அதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்