கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள விஸ்மா டிரான்ஸிட்டில் நடந்த பாலஸ்தீன அகதிகள் தொடர்பிலான சம்பவம் சுமூகமாக தீர்க்கப்பட்டது என்று மலேசிய ஆயுதப் படைகள் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை அல்லது பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அறிக்கையில் அது குறிப்பிட்டது.
சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை 5.00 மணியளவில் பாலஸ்தீனர்கள் குழு ஒன்று தாயகம் திரும்புவதற்கான விண்ணப்பத்தை விரைவில் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது.
“அந்நாளில் பணியில் இருந்த ஆயுதப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாலஸ்தீனர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்துவைத்தனர்,” என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆயுதப் படை தெரிவித்தது.
இருப்பினும் கட்டடத்தில் இருந்த சில அறைகலன்கள் சேதமடைந்தன என்று அது மேலும் கூறியது.
இந்தச் சம்பவம் இரவு 7.00 மணிவாக்கில் தீர்த்து வைக்கப்பட்டது.

