நியூசிலாந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகள்

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகள்

படம்: இபிஏ

12 Oct 2026 - 4:12 pm

2 mins read

வெலிங்டன்: வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி நியூசிலாந்துப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போது ஆட்சியில் இருக்கும், நியூசிலாந்து தேசியக் கட்சியின் தலைமையிலான நடு வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. நடு இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட தொழிலாளர்க் கட்சிதான் எதிர்க்கட்சிகளில் ஆகப்பெரியதாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், எந்தக் கட்சி(கள்) ஆட்சியமைக்கும் என்பதைச் சிறிய கட்சிகள் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறையும் அவ்வாறே நடக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

நியூசிலாந்து தேசியக் கட்சி

நியூசிலாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த, அந்நாட்டின் தற்போதைய பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோன், 56, இரண்டாவது தவணைக்காலம் வரை அப்பொறுப்பை வகிக்கும் இலக்கைக் கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக அவரின் ஆட்சி எதிர்பாரா களேபரத்தைச் சந்தித்துள்ளது. இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

தேசியக் கட்சி இம்முறை பொருளியலில் கவனம் செலுத்துகிறது.

தொழிலாளர்க் கட்சி

தொழிலாளர்க் கட்சியின் தலைவராக நியூசிலாந்துப் பிரதமர் பொறுப்பை அடைவது 48 வயது கிறிஸ் ஹிப்கின்சின் இலக்காகும். 2023ஆம் ஆண்டுத் தேர்தலில் தொழிலாளர்க் கட்சி தோல்வியடைந்தது.

முன்னாள் நியூசிலாந்துப் பிரதமரும் தொழிலாளர்க் கட்சித் தலைவருமான கிறிஸ் ஹிப்கின்ஸ்.
முன்னாள் நியூசிலாந்துப் பிரதமரும் தொழிலாளர்க் கட்சித் தலைவருமான கிறிஸ் ஹிப்கின்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

முதன்முதலில் 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிப்கின்ஸ், முந்தைய பிரதமர் ஜெசின்டா ஆர்டன் பதவி விலகிய பிறகு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமரானார். ஆனால், அந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் தோல்வியையடுத்து அவர் பிரதமர் பொறுப்பை இழந்தார்.

சுகாதாரப் பராமரிப்பு, போக்குவரத்து போன்றவற்றை மேலும் கட்டுப்படியான விலையில் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதில் தொழிலாளர்க் கட்சி கவனம் செலுத்துகிறது.

நியூசிலாந்து முன்னுரிமை கட்சி

2025ஆம் ஆண்டு மே மாதம் வரை துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த வின்ஸ்டன் பீட்டர்ஸ், நியூசிலாந்துக்கு முன்னுரிமை கட்சியின் (New Zealand First) தலைவராகத் தேர்தலில் களமிறங்குகிறார். அக்கட்சி, 1990களிலிருந்து தொழிலாளர்க் கட்சி, தேசியக் கட்சி ஆகிய இரண்டின் கூட்டணி அரசாங்கங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.

ஆக்ட் நியூசிலாந்துக் கட்சி

ஆக்ட் நியூசிலாந்துக் கட்சியின் தலைவரான டேவிட் சீமோர் 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.

ஆக்ட் நியூசிலாந்து, ஆளும் கூட்டணியில் இடம்பெறும் மூன்று கட்சிகளில் ஆகச் சிறியதாகும். தேசியக் கட்சி, நியூசிலாந்து முன்னுரிமைக் கட்சி ஆகியவை கூட்டணியில் உள்ள மற்ற இரண்டு கட்சிகள்.

இதர கட்சிகள்

த கிரீன் பார்ட்டி, நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவ்ரி சமூகத்தைப் பிரதிநிதிக்கும் டெ பார்ட்டி மாவ்ரி, ஒப்பர்ச்சூனிட்டி ஆகிய கட்சிகளும் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

குறிப்புச் சொற்கள்