பாஸ்-பெர்சத்து பிளவு தேர்தல் தந்திரம் அல்ல, உண்மையானது: ஹாடி

பாஸ்-பெர்சத்து பிளவு தேர்தல் தந்திரம் அல்ல, உண்மையானது: ஹாடி

2 mins read
13e4fba7-3513-4dc6-9e23-3d44057d761a
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: தமது கட்சிக்கும் பெர்சத்துக் கட்சிக்கும் இடையிலான பிளவு உண்மையானது என்றும் அது ஒரு தேர்தல் தந்திரம் அல்ல என்றும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வலியுறுத்தினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் இரு கட்சிகளும் பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) சின்னத்தின் கீழ் தொடர்ந்து போட்டியிட்டாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஜூன் 26ஆம் தேதி மாராங்கில் உள்ள ருசிலா பள்ளிவாசலில் காலை சமயச் சொற்பொழிவை ஆற்றிய பின்னர் பேசிய அப்துல் ஹாடி, பெர்சத்துக் கட்சி பிஎன் கூட்டணி சின்னத்தைப் பயன்படுத்த வலியுறுத்தியதால், பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகள் தனித்தனியாக பிரசாரம் செய்து வருவதாகக் கூறினார்.

“நாங்கள் அந்த சின்னத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம். பெர்சத்துவைப் பொறுத்தவரை, இது ஓர் உத்தியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது அவர்களுடைய சொந்த உத்தியாக இருக்கலாம். ஆனால், பாஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள்,” என்று உத்துசான் மலேசியா நாளிதழ் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பாஸ், பெர்சத்துக் கட்சிகளுக்கு இடையேயான வெளிப்படையான ‘பிரிவினை’ என்பது வெறும் அரசியல் நாடகம் என்றும் எதிர்கால மாநில மற்றும் பொதுத் தேர்தல்களில் பிஎன் கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக இரு கட்சிகளும் இறுதியில் சமரசம் செய்துகொள்ளும் என்றும் எழுந்த யூகங்களுக்கு அப்துல் ஹாடி பதிலளித்தார்.

பாஸ் கட்சி ஏற்கெனவே பெர்சத்துவுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முறித்துக்கொண்டுவிட்டது என்றும் ஆனாலும், கூட்டணி அதனை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெர்சத்து, பிஎன் கூட்டணியில் உறுப்பினராகத் தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிளவு ஏற்கெனவே ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் பிரதிபலித்துள்ளது. அங்கு, பாஸ், பெர்சத்துக் கட்சிகள், ஒரே பிஎன் சின்னத்தின்கீழ் போட்டியிட்டாலும், தனித்தனி பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்தல்கூட்டணிபெர்சத்துபிரசாரம்