பாஸ் தனது முடிவைச் சொல்லிவிட்டது; இனி போராட்டம்தான்:முகைதீன்

பாஸ் தனது முடிவைச் சொல்லிவிட்டது; இனி போராட்டம்தான்:முகைதீன்

2 mins read
e8a9b8bf-8cd0-4c37-a09a-8587413fb148
பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதீன் யாசின் (நடுவில்). - படம்: தமிழ் மலர்

கோலாலம்பூர்: அண்மையில் தங்களது உறவைத் துண்டித்துக்கொண்ட பாஸ் கட்சிக்கு எதிராக முழு வீச்சில் போராடத் தயாராக இருப்பதாக பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். இரு கட்சியினரும் பிரிந்து செல்வதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, ​​”அவர்கள் தங்களது முடிவை எடுத்துவிட்டார்கள். இனி நாங்கள் எல்லா முனைகளிலும் போராடத் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார். செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உச்ச மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், முகைதீன் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த வாரம் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பெர்சத்துக் கட்சி அதிகார வெறி கொண்டதாகவும் மலாய்-முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்காததாலும் தனது கட்சி அதனுடனான உறவைத் துண்டிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார்.

“வரவிருக்கும் ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின்கீழ் பெர்சத்து போட்டியிடும். பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை நிறுவ நாங்கள் உதவியதால், இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்போம்,” என்று முகைதீன் தெரிவித்தார். மாநிலத் தேர்தல்களுக்கான கூட்டணியின் ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்க பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் அஹம்மது சம்சுரி மொக்தார் இன்னும் ஒரு கூட்டத்தைக் கூட கூட்டவில்லை என்றும் முகைதீன் மேலும் கூறினார். முன்னதாக, எந்தவொரு இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்க பெரிக்கத்தான் நேஷனல் கூடும் என்று அவர் கூறினார். அத்தகைய கூட்டங்கள் முக்கியமானவை. ஆனால், இப்போது அது ஒரு கட்டுப்பாடற்ற சூழலாக இருக்கிறது என்று அவர் தொகுதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நேஷனலில் தொடர்ந்து நீடிப்பதற்கான பெர்சத்துவின் முடிவுக்குப் பின்னால் அது இதுவரை சம்பாதித்த நற்பெயரே ஒரு காரணி என்று முகைதீன் குறிப்பிட்டார். பெரிக்கத்தான் நேஷனல் ஒரு வலுவான அடையாளம், நாங்கள் அதில் தொடர்ந்து நீடிப்போம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எந்தக் கட்சியாலும் பெர்சத்துவை பெரிக்கத்தான் நேஷனலிலிருந்து வெளியேற்ற முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்