ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் அவதியுற்ற பயணிகள்

2 mins read
தொழில்நுட்பக் கோளாற்றால் தானியக்கக் குடிநுழைவு நடைமுறையில் இடையூறு
f85d85c3-2fea-4cf8-af67-a64133b11e3b
ஆஸ்திரேலியாவின் ஆகப் பரபரப்பான சிட்னி விமான நிலையத்தில் காலை 9.30 மணி (சிங்கப்பூர் நேரம்) நிலவரப்படி விமானச் சேவைகளில் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையங்களில் நவம்பர் 8ஆம் தேதி காலை தொழில்நுட்பக் கோளாற்றால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் அங்க அடையாளம், முக அடையாளத்தைச் சரிபார்க்கும் தானியக்கக் குடிநுழைவு நடைமுறைக்கான முகப்புகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அதையடுத்து, அனைத்துலகப் பயணிகளைக் கையாளும் விமான நிலைய முனையங்களில் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.

எனவே, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய எல்லைப் படையின் அறிக்கை கூறுகிறது.

சிக்கலைச் சீர்செய்யும் பணிகள் நடைபெறுவதாகவும் தானியக்க நடைமுறை மெதுவாக மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஆஸ்திரேலியாவில் ஆகப் பரபரப்பானது சிட்னி விமான நிலையம். சிங்கப்பூர் நேரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி அங்கு எந்த விமானச் சேவையும் பாதிக்கப்படவில்லை என்று விமான நிலையப் பேச்சாளர் கூறினார்.

இருப்பினும் தரையிறங்கிய பயணிகளும் புறப்பட்டுச் செல்லும் பயணிகளும் வழக்கத்தைவிட நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டார். விமான நிலையச் செயல்பாடுகள் எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, பிரிஸ்பன் விமான நிலையத்தில் குடிநுழைவு நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாகத் தற்போது அங்குள்ள தமிழ் முரசின் செய்தியாசிரியர் இர்ஷாத் முஹம்மது கூறினார்.

பயணிகள் அனைவரும் தானியக்க முகப்புக்குப் பதிலாக, அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ள முகப்புகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் குடிநுழைவு நடைமுறையை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

உள்ளூர் நேரப்படி காலை 8.35 மணிக்கு (சிங்கப்பூரில் காலை 6.35 மணி) பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிநுழைவு நடைமுறையை நிறைவுசெய்ய ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகம் தேவைப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், ஆஸ்திரேலியக் குடிநுழைவு அதிகாரிகளும் பிரிஸ்பன் விமான நிலைய ஊழியர்களும் நிலைமையைச் சீராக்க உதவியதாகத் திரு இர்ஷாத் கூறினார்.

பயணிகள் காத்திருக்கும் வரிசையின் ஒழுங்குமுறையை உறுதிசெய்ததுடன் தொழில் நுட்பக் கோளாறு குறித்த அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்