கோலாலம்பூர்: சிலாங்கூரின் மோசமான தூய்மைக்கேடு குறித்து சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ஏராளமான புகார்கள் தனக்கு வந்துள்ளதாகவும், மாநிலத்தின் நற்பெயரை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“முன்பு, மக்கள் எனக்கு எழுதும்போது, பெரும்பாலும் தங்கள் பெயர்களையும் தொடர்பு விவரங்களையும் விட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது அவர்கள் தங்கள் முழுமையான தனிப்பட்ட தகவலையும் வழங்குகிறார்கள். தங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்புகொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
“அவர்கள் தங்கள் புகாரை உறுதிப்படுத்த புகைப்படங்களையும் இணைக்கிறார்கள். அவர்கள் ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். ஒருவர் எனது கவனத்தை ஈர்க்கும் விரக்தியில், நிலைமையைப் பற்றி எனக்கு ஒரு திறந்த கடிதத்துடன் வலைப்பதிவில் எழுதினார்,” என்று பெர்னாமாவுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் மன்னர் கூறினார்.
“நான் உண்மையிலேயே சலித்துப் போய்விட்டேன். நகர மன்றங்கள் தங்கள் பணியைத் துரிதப்படுத்த வேண்டிய நேரம் இது.
“சிலாங்கூர், மலேசியாவின் மிகவும் வளர்ச்சியடைந்த, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம். அங்கு 7.4 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். மேலும் இது நாட்டின் பெருமைமிகு மாநிலம்,” என்று மன்னர் கூறினார்.
முன்னேற்றம், செயல்திறன், நல்லாட்சிக்கு இந்த மாநிலம் ஒரு முன்மாதிரியாக நிற்க வேண்டும் என்று சுல்தான் ஷராபுதீன் கூறினார். “ஆனால் இன்று சிலாங்கூரின் பல நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் வழியாக நடந்து செல்வது மிகவும் வித்தியாசமான கதையைச் சொல்கிறது என்று மக்கள் புகார் கூறுகிறார்கள்.
“நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், அடைபட்ட வடிகால்கள், சீரற்ற பின்புறப் பாதைகள், குப்பைகள் நிறைந்த சாலைகள் ஆகியவற்றின் படங்களை நான் காண்கிறேன். சில தெருக்களில் நடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது என்று மக்கள் அதிருப்தி கொள்கின்றனர்.
“கிள்ளான் முதல் பெட்டாலிங் ஜெயா வரை, அம்பாங் மற்றும் சுபாங் வரை - குடியிருப்பாளர்கள் அனைவரும் தெருக்களின் தூய்மை சரிவு கண்டுள்ளது குறித்து விரக்தியுடன் குரல் கொடுக்கும்போது ஏதோ மிகவும் தவறு நடந்துள்ளது என்பதை உணர்கிறேன்,” என்று மன்னர் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் நகர மன்றங்கள் உடனடியாகச் செயல்பட்டு, மாநிலத்தைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தூரிதப்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.


