தோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் சபை உறுப்பினர்கள் உட்பட 37 நிர்வாகிகளின் சம்பளத்தைக் குறைக்க இருக்கிறது.
ஜப்பானிய ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி ஒருவர் பணிக்கு முன்பு மது அருந்தியதால் விமானச் சேவை 20 மணி நேரம் வரை தாமதமடைந்தது.
அதுமட்டுமன்றி, மதுபானம் தொடர்பாக மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்ததால் நிர்வாகிகளின் சம்பளம் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இல்லை என்பதை நிர்வாகிகளுக்குப் புரியவைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறியது.
கடந்த வாரம் ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சர், ஜப்பான் ஏர்லைன்சைச் சாடினார்.
நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி தம்மிடம் தெரிவிக்கும்படி ஜப்பான் ஏர்லைன்சுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சோக்கோ டொட்டோரியின் இரண்டு மாதச் சம்பளம் 30 விழுக்காடு குறைக்கப்படும்.
மற்ற இயக்குநர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் சம்பளம் 10 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.