தைப்பே: தைவான் அதிபர் லாய் சிங் டே, அந்நாட்டில் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தங்களை அவரது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகில் தைவான் மீதான நம்பிக்கையை அந்த மாற்றங்கள் பாதிக்கும் என்று அதிபர் லாய் திங்கட்கிழமை (டிசம்பர் 15) எச்சரித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளை ஏற்காமல் சர்வாதிகாரப் போக்குடன் அதிபர் லாய்யின் அரசாங்கம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP) வென்று திரு லாய் பதவியேற்றார். அரசாங்கத்தை ஏற்று நடத்தினாலும் நாடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
குவோமின்டாங் கட்சி (KMT) அதிக உறுப்பினர்களைக் கொண்டு, சிறிய கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தை கைவசம் வைத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக அங்கு தன்னிச்சையாக பல சட்டங்களைக் கூட்டணி அமலுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கி, உள்ளூர் அரசாங்க அமைப்புகளுக்கு அதிக நிதி வழங்கும் சட்டத்தையும் 2018ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறுசீரமைக்கும் சட்டத்தையும் எதிர்க்கட்சிகள் அமலுக்கு கொண்டுவர விழைகின்றன.
அந்த இரு சட்டங்களையும் நிறைவேற்ற திரு லாய்யின் அரசாங்கம் மறுக்கிறது. அவை நடைமுறைக்கு ஏற்றதல்ல, அதற்கான நிதியும் அரசாங்கத்திடம் இல்லை என்று திங்கட்கிழமை அதிபர் லாய் தெரிவித்தார்.
அந்தச் சட்டங்கள் மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்துக்கு நேரடியாகச் சென்று உறுப்பினர்களுடன் பேசப் போவதாக அதிபர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“உலகின் ஜனநாயக மையமாக தைவான் அமைந்துள்ளது. நாட்டின் நிலையற்ற தன்மை அனைத்து நாடுகளையும் பாதிக்கும். முறையற்ற சட்டங்கள் தைவானின் போட்டித்தன்மையைச் சீர்குலைத்துவிடும்,” என்று அதிபர் லாய் சமூக ஊடகத்தில் மக்களுக்கு வெளியிட்ட காணொளியில் பதிவிட்டார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியினர், அதிபருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவரும் திட்டத்தை நிலுவையில் வைத்துள்ளனர். அவ்வாறு அவர்கள் செய்தால் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

