பனாமாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல கட்டடங்கள் சேதம்

பனாமாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல கட்டடங்கள் சேதம்

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 10:00 am

2 mins read

பனாமா சிட்டி: தெற்கு பனாமாவை, அக்டோபர் 9 தேதியன்று 7.7 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதிலும் பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதில் சிலர் காயமடைந்திருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டடங்கள் சரிந்ததில் பல வாகனங்களில் உருத்தெரியாமல் நசுங்கின.

நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி ஓடினர். இதனால் பனாமா நகரத்தின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

பேருந்து வருமா, வராதா என்ற சந்தேகத்துடன் காத்திருந்ததாக பொருளியல் அமைச்சின் ஊழியரான ஜுவான் சான்செஸ், 37 என்பவர் கூறினார்.

இருப்பினும், பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இதற்கிடையே அதிபர் ராவுல் முலினோ, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பேனோனோமே நகரத்திற்கு விரைந்தார். அங்கு சில கட்டடங்கள் இடிந்து விழுந்திருந்தன, ஒரு தேவாலயமும் சேதமடைந்திருந்தது.

தலைநகரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியில் 12.6 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அந்நாட்டை உலுக்கியபோதிலும் பனாமா கால்வாய், ‘கோப்ரே பனாமா’ தாமிரச் சுரங்கம் ஆகியவை வழக்கம்போல இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொகுமென் அனைத்துலக விமான நிலையத்திலும் தற்காலிகப் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 203 கி.மீ. தொலைவில் உள்ள பனாமா கால்வாய் வழக்கம்போல் இயங்கியது.

அக்டோபர் 9 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் பெரும் சேதம் ஏற்படாமல் பனாமா தப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்