தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் திமிங்கிலங்கள் காணப்படுவது ஆரோக்கியமான கடல்வாழ் பல்லுயிரினச்சூழல் அறிகுறி: ஆய்வாளர்

1 mins read
5f514d15-f4a7-4e45-b662-9de33806fc7d
கூனல் முதுகுத் திமிங்கிலம் (humpback whale) மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் அவற்றைத் தொந்தரவு செய்தால் தற்காக்கும் விதமாகச் செயல்படும் என்று கூறப்படுகிறது. - படம்: ஹரியான் மெட்ரோ/ஃபேஸ்புக்

கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும் இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ரெடாங் தீவில் செப்டம்பர் 14ஆம் தேதி கூனல் முதுகுத் திமிங்கிலம் (humpback whale) காணப்பட்டது, அத்திமிங்கிலம் வழக்கமாக ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குச் செல்லும் பாணியை ஆவணப்படுத்தும் வாய்ப்பு என்று மீன்வள ஆய்வுக் கழக அலுவலர் முகமது அமிருல் சித்திக் அப்துல் ரஷித் கூறினார்.

“இந்த வகைத் திமிங்கிலங்கள் மலேசியாவில் காணப்படுவது அரிது. எனவே இவற்றின் இடமாற்றத்தை ஆவணப்படுத்தவும் இங்குள்ள பல்லுயிரிகள், அவற்றின் வாழ்விடங்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கவும் இது நல்ல வாய்ப்பு,” என்றார் அவர்.

“இதுவரை இவ்வகைத் திமிங்கிலம் மலேசியக் கடற்பகுதியில் காணப்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. உலகெங்கும் உள்ள கூனல் முதுகுத் திமிங்கிலங்கள் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், அது ஆர்க்டிக் கடல், அண்டார்டிகா கடல் போன்ற தனது வாழ்விடத்திலிருந்து கூடுதல் தொலைவு இடமாற்றம் செய்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியப் பெருங்கடல் சூழலில் அந்தத் திமிங்கிலம் சில மிரட்டல்களுக்கு உள்ளாகும் என்றார் அமிருல் சித்திக். குறிப்பாக ஆழமற்ற நீர்ப்பகுதிகளில் அது சிக்கிக்கொள்ள நேரிடலாம் என்பதை அவர் சுட்டினார்.

பிளாஸ்டிக் மாசு, அபாயகரமான ரசாயனங்கள் போன்றவையும் திமிங்கிலங்களையும் அவற்றின் உணவு வளங்களையும் பாதிக்கும் என்று கூறிய அவர், கடல் நீரின் வெப்பநிலை மாற்றத்தாலும் அவற்றுக்கான உணவு, இடமாற்ற பாணி ஆகியவை மாறுபடும் என்றார்.

குறிப்புச் சொற்கள்