பதவி விலகிய ஆண்டனி லோக் மீண்டும் பொறுப்பேற்க பிரதமர் அன்வார் அழைப்பு

பதவி விலகிய ஆண்டனி லோக் மீண்டும் பொறுப்பேற்க பிரதமர் அன்வார் அழைப்பு

படம்: பெர்னாமா

28 Nov 2026 - 5:04 pm

2 mins read

செரம்பான்: பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றிய மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லோக், அண்மையில் பதவி விலகல் கடிதத்தை அளித்ததை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சனிக்கிழமை (நவம்பர் 28) மனம் திறந்தார்.

அதேவேளை நாட்டுக்குச் சேவையாற்றும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.

திரு ஆண்டனி பதவி விலகியதன் காரணங்களைத் தாம் உணர்வதாகவும் மதிப்பதாகவும் கூறிய பிரதமர், நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் சேவையாற்றும் கடமை முன்னிலை பெறவேண்டும் என்று கருத்துரைத்தார்.

“அவரது பணி சிறப்பானது, பாராட்டுக்குரியது. அதனால்தான் ஒரு பிரதமராக அவரது பதவி விலகலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார் திரு அன்வார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பரோய் பகுதியில் உள்ள விளையாட்டரங்கில் நடந்த பொதுமக்கள் நிகழ்வில் பிரதமர் தனது வேண்டுகோளை முன்வைத்தார்.

திரு ஆண்டனி விடுப்பில் உள்ளபோதும் அவரை நெகிரி செம்பிலானில் நடக்கும் போக்குவரத்துத் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும்படியும் அமைச்சர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தாம் கேட்டுக்கொண்டுள்ளதை திரு அன்வார் பகிர்ந்தார். ஏனெனில் அந்நிகழ்வை மாநில அரசாங்கமும் போக்குவரத்துத் துறை அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

போக்குவரத்துத் துறை, நாட்டின் உத்திப்பூர்வ அமைச்சுகளில் ஒன்று. அது ஆகாயம், கடல், நிலம் என போக்குவரத்து உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்து இயங்கும் துறையாகும் என்றார் திரு அன்வார்.

காரணங்கள் எதுவாகினும் மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுதல் முதன்மை பெறவேண்டும் என்றார் பிரதமர் அன்வார்.

குறிப்புச் சொற்கள்