மலேசியர்களின் சம்பளத்தை உயர்த்த முன்னுரிமை: அமைச்சர் வலியுறுத்து

மலேசியர்களின் சம்பளத்தை உயர்த்த முன்னுரிமை: அமைச்சர் வலியுறுத்து

படம்: பெரித்தா ஹரியான்

24 Sep 2026 - 6:28 pm

2 mins read

ஜார்ஜ்டவுன்: மலேசியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் தலையாய முன்னுரிமை அளிக்க வேண்டும் என மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசிர் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்துலக அளவில் நிச்சயமற்ற அரசியல் சூழல்கள் நிலவி வந்தபோதிலும், மலேசியாவின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், நாட்டின் பொருளியல் வளர்ச்சியானது மலேசியர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் அமைவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அத்துடன் உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்தி, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள, அதிக மதிப்புமிக்க தொழில்துறைகளில் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பினாங்கு வாட்டர்ஃபிரன்ட் மாநாட்டு மையத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ‘கேஎல்20’ நிகழ்வின்போது அமைச்சர் அக்மல் செய்தியாளர்களிடம் பேசினார்.

“சாதாரண மலேசியர்களின் சம்பளம் குறித்து ஆழமாக விவாதிக்க இதுவே சரியான தருணம். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மலேசியர்களின் ஊதிய நிலையை எவ்வாறு மறுஆய்வு செய்வது அல்லது மேம்படுத்துவது என்பது குறித்த அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறோம்,” என்று திரு அக்மல் கூறினார்.

தொழில்துறைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அவர், நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துவதே அதன் நோக்கம் என்றார் அவர். அதன்மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மலேசியர்களுக்கு நல்ல சம்பளத்தை வழங்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பயனீட்டாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளை அரசாங்கம் தொடர்ந்து ஆராயும் என்றும் திரு அக்மல் கூறினார்.

அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை 2027 தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசம்பளம்வரவுசெலவுத் திட்டம்