மெக்சிகோவில் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; 120 பேர் காயம்

1 mins read
81eb9c2e-ff00-4b09-b8d7-41b3b10af312
சனிக்கிழமையன்று (நவம்பர் 15) மெக்சிகோ நகரில் உள்ள தேசிய மாளிகையின் வெளியில் கூடிய ஆர்பாட்டக்காரர்கள், அவர்களைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: அதிபர் கிளாடியா ஷெயின்பாம்மின் அரசாங்கத்தை எதிர்த்து மெக்சிகோ சிட்டியில் சனிக்கிழமை (நவம்பர் 15) ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்முறையில் 120 பேர் காயமடைந்தனர். சமூக ஊடகத்தைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதாக அறியப்படும் போராட்டத்தில் ‘ஜென் சி’ என்று அழைக்கப்படும் அந்நாட்டு இளைய சமுதாயத்தினர் அதிகம் பங்கேற்றனர்.

குறிப்பாக, போதைப்பொருள் கலாசாரத்தையும் அதிபர் தலைமையிலான நாட்டின் பாதுகாப்புச் செயல்பாடுகளையும் எதிர்த்து போராட்டம் நடந்தது.

மெக்சிகோவில் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆட்சி நடத்தும் அதிபருக்கு நாட்டில் 70 விழுக்காடு நேர்மறை ஆதரவு இருந்தாலும் அங்குப் பல தொடர் கொலைக் குற்றங்கள் நடந்துள்ளது நாட்டை உலுக்கியுள்ளது.

பலமணி நேரம் முறையாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முகமூடி அணிந்த கும்பல் உள்ளே புகுந்து வன்முறையைத் தூண்டியதாக மெக்சிகோ சிட்டி காவல்துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தோரில் 100 காவல்துறை அதிகாரிகளும் 20 ஆர்ப்பாட்டக்காரர்களும் கத்திக்குத்துக்கு ஆளான ஒரு செய்தியாளரும் அடங்குவர். அவர்களில் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் திருட்டு, வன்முறை போன்ற குற்றங்களுக்காக 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தை நிராகரித்திருந்த அதிபர், அது வெளிநாட்டிலிருந்து தூண்டிவிடப்படும் சதி என்று கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்