தோக்கியோ: ஜப்பானில் ஆழ்குழி ஒன்று ஏற்பட்டு சரக்கு வாகன ஓட்டுநர் அதில் சிக்கிக்கொண்டதை அடுத்து, அவரை அடைவதற்காக சரிவுப்பகுதி ஒன்றை மீட்புப் பணியாளர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி உருவாக்கி முடித்துள்ளனர்.
தற்போது 40 மீட்டர் அகலமுடைய அந்தக் குழியில் வாகனம் விழுந்து நான்கு நாள்களாகிவிட்டன.
தற்போது ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் நீளத்துக்கு உள்ள அந்தக் குழியில் மீட்புப் பணியை மேற்கொள்ள மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாய்வுப் பகுதியைக் கொண்டு கனரக உபகரணங்களைக் குழிக்குள் மீட்புப் படையினர் கொண்டு செல்வர்.
“இடிபாடுகளை அகற்றி ஓட்டுநரை முடிந்தவரை விரைவாக மீட்க நாங்கள் முயற்சி செய்வோம்,” என்று சைத்தாமா வட்டார ஆளுநர் மோட்டோஹிரோ ஓனோ செய்தியாளர்களிடம் கூறினார்.
மண், குப்பைகளால் மூடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 28ஆம் தேதி நண்பகல் முதல் சிக்கியுள்ள 74 வயது ஓட்டுநருடன் எந்த வித தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை.
மேலும், சுமார் 15 மீட்டர் ஆழத்தில் குழியின் சுவர்கள் தொடர்ந்து சரிந்து வருவதால் மீட்புப் பணியாளர்களால் உள்ளே வெகுநேரம் இருக்கவும் முடியவில்லை என்று என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே, வட்டாரத்தில் வசிக்கும் 1.2 மில்லியன் பேரும் தங்களின் குளியலையும் சலவையையும் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கழிவுநீர் கசிந்து மீட்புப் பணியைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு கூறப்பட்டுள்ளது.