ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்ட வெளியீடு 2027 தொடக்கத்திற்கு ஒத்திவைப்பு

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத் திட்ட வெளியீடு 2027 தொடக்கத்திற்கு ஒத்திவைப்பு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Nov 2026 - 7:50 pm

2 mins read

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான வரைவுத் திட்டத்தின் வெளியீடு 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கருத்துகளை இணைக்க அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மால் நசிர் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஎச் மீடியாவின் ‘ஆசிய எதிர்கால உச்சிமாநாடு 2026’ன் இடையே வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த அவர், “திட்டத்தைச் சுமுகமாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்ய, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஒருங்கிணைப்பின் இறுதிக்கட்டத்தில் இந்தப் பெருந்திட்டத்தின் வெளியீடு உள்ளது,” என்றார்.

இந்த வரைவுத் திட்டம் ஏற்கெனவே மார்ச் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டு, பின்னர் டிசம்பர் 4, 5 தேதிகளில் நடைபெறவுள்ள மலேசிய-சிங்கப்பூர் தலைவர்கள் சந்திப்புக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அது குறித்து திரு அக்மால் கூறுகையில், “திட்டம் தயாராக உள்ளது. வரைவு அறிக்கையை நாங்கள் சிங்கப்பூருடன் பகிர்ந்துள்ளோம். அவர்கள் வழங்கிய கருத்துகளை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார்.

“வருடாந்தரத் தலைவர்கள் சந்திப்பில் இது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டு, மெருகேற்றப்படும். இரு நாடுகளின் கால அட்டவணைக்கு ஏற்ப, வரைவுத் திட்ட வெளியீடு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“இரு நாட்டுப் பிரதமர்களாலும் இந்த ஆவணங்கள் கூட்டாக வெளியிடப்பட உள்ளதால், ஜோகூர்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு அமைச்சரவைக் குழுவின் மூலம் இந்த வரைவு ஆவணத்தைச் சிங்கப்பூருடன் பகிர்ந்து கொள்வது நல்லெண்ண அடிப்படையில் நியாயமானதாகும்,” என்றார் மலேசிய அமைச்சர்.

“திட்டத்தை இறுதிசெய்து வெளியிடுவதற்கு முன்பு சிங்கப்பூரின் கருத்துகளைப் பரிசீலிப்போம். அதனால்தான் நான் எதிர்பார்த்ததைவிட இதற்கு அதிகக் காலம் எடுக்கிறது,” என்றார் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அக்மால்.

தலைவர்களின் சந்திப்பு பேராக் மாநிலத்தின் ஈப்போவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், “இந்தத் திட்ட வெளியீடு ஜோகூர் பாரு அல்லது கோலாலம்பூரில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வரைவுத் திட்டமானது, பொதுமக்கள் பார்வையிட்டு “எங்களின் முக்கிய மதிப்பு முன்மொழிவுகளையும் முதன்மைத் திட்டங்கள் போன்றவற்றையும் புரிந்துகொள்ள உதவும் முதலீட்டு வழிகாட்டியாக இருக்கும் என்றார் அவர்.

சுங்கம் மற்றும் குடிநுழைவு அனுமதி போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டு, மக்கள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்தை எளிதாக்குவது இதில் உள்ள முக்கிய அம்சங்கள்.

குறிப்புச் சொற்கள்