சமூக ஊடகத்திலிருந்து எங்களுக்குப் பதிலாகத் தீய பதிவுகளை அகற்றுங்கள்: ஆ‌ஸ்திரேலிய இளையர்கள்

2 mins read
6287b18b-65f6-4494-ba9b-dd3c6bd22db1
நோவா ஜோன்ஸ் (இடம்), மேசி நியூலேண்ட் - படம்: டிஜிட்டல் ஃப்ரீடம் புரொஜெக்ட்

கேன்பரா: சமூக ஊடகத்திலிருந்து தீயவர்களும் கேடு விளைவிக்கும் பதிவுகளும் அகற்றப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் பதின்ம வயதினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடக நிறுவனங்களும் அரசாங்கமும் அவற்றின் வளங்களை அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக இணையத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை வெளியிடுவோரை நீக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இளம் ஆஸ்திரேலியர்கள் கணக்கு வைத்திருக்காமல் இருப்பதை மெட்டா, டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அடுத்த மாதம் (டிசம்பர் 2025) 10ஆம் தேதியிலிருந்து உறுதிசெய்ய வேண்டும்.

தீய படைப்புகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அத்தகைய சட்டம் அவசியம் என்று சமூக ஆர்வலர்களும் அரசாங்கத்தினரும் கருதுகின்றனர்.

இருப்பினும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக 15 வயது நிரம்பிய இளையர்கள் இருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். சுதந்திரமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் உரிமையை அந்தச் சட்டம் பறிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மனித உரிமைக் குழுவொன்றும் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான நோவா ஜோன்ஸ், இணையத்தில் தீய பதிவுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்காகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து 16 வயதுக்குட்பட்டோரைத் தடை செய்வது சரியான தீர்வன்று என அவர் சொன்னார். பிபிசி ரேடியோ 4இன் ‘டுடே’ நிகழ்ச்சியில் நோவா அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

வழக்குத் தொடுத்த இன்னொருவர் மேசி நியூலேண்ட். சமூக ஊடகங்களில் பொதுவாக விளையாட்டுகள், மிதமிஞ்சிய திரை நேரம் போன்ற பிரச்சினைகள் இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அதே நேரம், சமூக ஊடகங்களால் விழிப்புணர்வு, தொடர்பு, சமூகத்துடன் பிணைப்பு முதலிய நல்ல அம்சங்களும் இருப்பதைத் திருவாட்டி நியூலேண்ட் சுட்டினார்.

வழக்குப் பற்றிய தகவல் வெளியான பிறகு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய தொடர்பு அமைச்சர் அனிக்கா வெல்ஸ், அரசாங்கம் அதன் முயற்சியிலிருந்து பின்வாங்காது என்றார்.

“எந்த மிரட்டலுக்கும் வழக்கிற்கும் பெரிய தொழில்நுட்பத்திற்கும் அரசாங்கம் அசைந்துகொடுக்காது. ஆஸ்திரேலியப் பெற்றோரின் சார்பாக நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்,” என்றார் அமைச்சர் அனிக்கா.

சமூக ஊடகங்களை இளையர் பயன்படுத்துவதற்கு விதிக்கப்படவுள்ள தடைக்கு ஆஸ்திரேலியர்களிடம் ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்