தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோ அருகே ஆழ்குழிக்குள் சிக்கிய 74 வயது லாரி ஓட்டுநரை தேடி மீட்பதற்கு ஏதுவாக, குழியின் அருகே வசிக்கும் ஐந்து குடும்பங்கள் உடனடியாக அவர்களின் வீட்டைவிட்டு வெளியேறுமாறு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.
பாதுகாப்புக் கருதி அவர்கள் அந்த இடத்தைவிட்டு செல்லவேண்டும் என அதிகாரிகள் கூறினர்.
சைத்தாமா மாநிலம் யாஷியோ நகரின் சாலையில் ஜனவரி 28ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட ஆழ்குழிக்குள் லாரியுடன் ஓட்டுநர் விழுந்தார்.
அவரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இருப்பினும், குழியின் அளவு பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
துருப்பிடித்த கழிவுநீர்க் குழாய்கள் காரணமாக ஒலிம்பிக் நீச்சல்குளம் அளவுக்கு குழி பெரிதானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழியின் 50 மீட்டர் சுற்றளவில் உள்ள இதர குடியிருப்பாளர்களும் அவர்களின் வீட்டைவிட்டு வெளியேறுமாறு ஏற்கெனவே கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் ஐந்து குடும்பங்கள் வெளியேற வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் கூறினர்.
காப்பறைகளில் அவர்கள் தங்கலாம் என ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, குழிக்குள் ஓட்டுநரைத் தேட கனரக சாதனங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நெகிழ்வான சுற்றுப் பகுதியில் அந்தச் சாதனங்களை அந்த இடத்திற்குக் கொண்டு செல்ல இயலவில்லை.
அதனால், உறுதியான தரைப்பகுதியில் இருந்து 30 மீட்டர் நீளத்துக்கு சரிவுப்பாதை ஒன்று வேகமாகக் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
ஆயினும், அந்தச் சரிவுப் பாதையின் கீழ் மழைநிர் கலந்த கழிவுநீர் தேங்கியதால் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று அரசாங்க ஊடகமாக என்எச்கே கூறியது.