கோலாலம்பூர்: இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பதால் அமெரிக்காவின் பிரபல உணவகங்களையும் தயாரிப்புகளையும் மலேசிய வாடிக்கையாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இந்தப் போக்கு, மலேசிய உணவு, குளிர்பானத்துறைக்கு உத்வேகம் அளித்துள்ளது.
உள்ளூர் உணவகங்கள் பெருகி வருகின்றன.
அமெரிக்கத் தயாரிப்புகளை புறக்கணிப்பவர்களில் ஒருவரான திருவாட்டி லைலாடுல் சார்ஜனா, மெக்டோனல்ட்ஸ் பாணியில் உணவுகளைத் தயாரித்து விற்கத் தொடங்கினார்.
அவரும் அவரது கணவர் முஹமட் டாஃபிக் கைரூதீனும் சாலையோர வாகனத்தில் தொடங்கிய ‘அஹமட்’ஸ் ஃபிரைட் சிக்கன்’ இன்று மலேசியா முழுவதும் 35 கிளைகளாக விரிவடைந்திருக்கிறது.
2025ஆம் ஆண்டின் முடிவில் அந்த எண்ணிக்கை 100ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் கேஃபே ஸுஸ்பிரசோ, 2023ல் ஸ்டார்பக்சைவிட குறைவான சில இடங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் 2024ல் அதன் கிளைகள், ஸ்டார்பக்ஸ் சுருங்கும் அளவுக்கு இரண்டு மடங்காகப் பெருகியுள்ளன.
இன்று, ஸுஸ் காஃபி என்று அழைக்கப்படும் இவை, மலேசியாவின் மிகப்பெரிய காபி விற்பனையாளராக உள்ளது. தேங்காய் மற்றும் பனை வெல்லம் போன்ற உள்ளூர் சுவைகளில் விற்பனை செய்யும் இந்தக் காப்பிக் கடைக்கு 700க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நிரந்தரமானது என்று தென்கிழக்கு ஆசிய மாற்றங்களைக் கண்காணிக்கும் புவிசார் அரசியல் ஆலோசனை நிறுவனமான வியூஃபைண்டர் குளோபல் அஃபயர்ஸின் நிறுவனர் திரு. அடிப் சல்கப்லி கூறினார்.
மலேசியாவின் உணவுத் துறையின் அளவு 2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 27.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (S$35.5 பில்லியன்) இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான மோர்டோர் இன்டலிஜென்ஸ் மதிப்பிட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் உணவுத் துறையும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

