மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடந்த சில நாள்களாகக் கூடிவருகிறது. இது மலேசியாவில் செலவு செய்யும் சிங்கப்பூரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறிய அளவில் மட்டுமே விலை உயர்வு இருக்கும். அதனால் சிங்கப்பூரர்கள் மலேசியாவில் பொருள்களைத் தொடர்ந்து வாங்குவார்கள் என்றும் கருதப்படுகிறது. அடிக்கடி மலேசியாவுக்குச் செல்பவர்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
ரிங்கிட் மதிப்பு கூடியதால் சிங்கப்பூருக்கு வந்து செலவு செய்ய மலேசியர்கள் விரும்புவார்கள் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.17 ரிங்கிட் கிடைக்கும். இவ்வாண்டின் தொடக்கத்தில் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.30 ரிங்கிட் கிடைத்தது.
“ஜோகூர் பாருவுக்குச் செல்வதும் எளிதாக உள்ளது. சிங்கப்பூரைவிட மலிவான விலையில் உணவு கிடைக்கிறது. சில சேவைகளும் குறைந்த விலையில் உள்ளன. இதனால் சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து மலேசியாவில் செலவு செய்வார்கள்,” என்று பொருளியல் வல்லுநர் சாங் செங் வுன் கூறுகிறார்.
அதே நேரம் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் பலரும், வெள்ளி வலுவான நிலையில்தான் உள்ளது என்று கூறுகின்றனர்.
“ரிங்கிட் மதிப்பு வெள்ளிக்கு ஈடாக வளர இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்று வல்லுநர்கள் சொல்கின்றனர். அதனால் தற்போதைக்கு நிலவும் சிறுசிறு விலைமாற்றங்கள் பிரச்சினையல்ல,” என்று சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் கூறுகின்றனர்.

