நஜிப் ரசாக் நிதி திரட்டல்: 9.25 மில்லியன் ரிங்கிட் சேகரிப்பு

நஜிப் ரசாக் நிதி திரட்டல்: 9.25 மில்லியன் ரிங்கிட் சேகரிப்பு

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Sep 2026 - 5:48 pm

2 mins read

கோலாலம்பூர்: நஜிப் ரசாக் ஒற்றுமை நிதிக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) காலை 10 மணி நிலவரப்படி 9.25 மில்லியன் ரிங்கிட் (S$2.91 மி.) நிதி திரட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது 50 மில்லியன் ரிங்கிட் என்ற இலக்கை அடைய இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது என்று அம்னோ தலைவர் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நிதி சேகரிப்பை அதிகரிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாஹித் கூறினார்.

“இன்று காலை 10 மணி நிலவரப்படி, நாங்கள் 9.25 மில்லியன் ரிங்கிட் நிதியைத் திரட்டியுள்ளோம். இது 50 மில்லியன் ரிங்கிட் என்ற இலக்கை விடக் குறைவாகவே உள்ளது.

“நிதியை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மன்னிப்பு வாரியம் நிர்ணயித்துள்ள தொகையை அடைய எங்கள் நண்பர்கள் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘மக்கள் சக்தி மலேசியா’ கட்சியின் 18வது பொதுச் சபைக் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

துணைப் பிரதமருமான ஸாஹிட், நஜிப் தமது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான ஏற்பாடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தவும், அவரது நிதிச் சுமையைக் குறைக்க உதவும் வகையில், அம்னோ கட்சி செப்டம்பர் 18ஆம் தேதி நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்அம்னோமன்னிப்பு