ஜோகூரில் ஆர்டிஎஸ் இணைப்புப் பேருந்துச் சேவை விரைவில் அறிமுகம்

ஜோகூரில் ஆர்டிஎஸ் இணைப்புப் பேருந்துச் சேவை விரைவில் அறிமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 7:00 pm

2 mins read

இஸ்கந்தர் புத்ரி: தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, பயணிகளுக்கு விரிவான பயண வாய்ப்புகளை வழங்க ஜோகூர் பொதுப் போக்குவரத்துக் கழகத்தின்வழி ஆர்டிஎஸ் இடைவழிப் பேருந்துச் சேவையை மாநில அரசாங்கம் வழங்கவுள்ளது.

புக்கிட் சாகர் ஆர்டிஎஸ் நிலையத்துடன் கோத்தா சிறைச்சாலைப் பகுதியை இணைக்க நான்கு பேருந்துகள் முன்மொழியப்பட்டுள்ளதாக மாநிலப் பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே தெரிவித்தார்.

15 நிமிட இடைவெளியில் இயங்கும் இச்சேவை எஸ்கேஎஸ் பேரங்காடி, ஆர் அண்ட் எஃப் பேரங்காடி, கோத்தா சிறைச்சாலையிலுள்ள வாகன நிறுத்துமிடம் ஆகிய முக்கிய இடங்களையும் உள்ளடக்கும் என வியாழக்கிழமை (நவம்பர் 26) சுல்தான் இஸ்மாயில் கட்டடத்தில் நடைபெற்ற ஜோகூர் மாநிலச் சட்டமன்ற அமர்வில் அவர் கூறினார்.

ஜேபி சென்ட்ரலையும் புக்கிட் சாகர் ஆர்டிஎஸ் நிலையத்தையும் இணைக்கும் துணைப் பேருந்துச் சேவையும் வழங்கப்படுகிறது. இதற்கு 2027 ஜோகூர் வரவுசெலவுத் திட்டத்தில் 1.5 மில்லியன் ரிங்கிட் (470,500 வெள்ளி) ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோகூர் பாரு நகர மையப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, தடையற்ற பயணத்தை உறுதிசெய்ய இது உதவும்.

இதனிடையே, ஜோகூரில் பழைமையான கல்நார் சிமென்ட் குழாய்கள் உடைவதால் நீர் விநியோகம் தடைபடுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2020 முதல் 535 மில்லியன் ரிங்கிட் செலவில் 801 கிலோமீட்டர் தொலைவிற்குப் பழைய குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 361 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் 422 கிலோமீட்டர் தொலைவுக்கான குழாய்கள் திட்டமிடல், ஏலக்குத்தகை நிலைகளில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்