சிரம்பான்: நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், அம்மாநில முதல்வர் இஸ்மாயில் லாசிமை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) நேரில் பார்த்தபோது அனைவர் முன்னிலையில் அவரைக் கண்டித்தார்.
“இங்கிருந்து சென்றுவிடுங்கள்,” என்று துவாங்கு முஹ்ரிஸ் அவரைப் பகிரங்கமாகத் திட்டி அனுப்பிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக துவாங்கு முஹ்ரிஷ் பள்ளிவாசலுக்குச் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
தாம் இனி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் அல்லர் என்று திரு இஸ்மாயில் லாசிம் குறிப்பிட்டிருந்ததை துவாங்கு முஹ்ரிஸ் சுட்டினார்.
திரு இஸ்மாயில் லாசிம் தமது நிலைப்பாட்டை மாற்றிகொண்டு சொன்ன சொற்களை முறைப்படி திரும்பப் பெறாதவரை, அவர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்று துவாங்கு முஹ்ரிஸ் கோபமாகத் தெரிவித்தார்.
கடுமையான தொனியில் பேசிய துவாங்கு முஹ்ரிஸ், “இங்கிருந்து சென்றுவிடுங்கள், உங்களைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நான் இந்த மாநிலத்தின் ஆட்சியாளர் இல்லையா? அப்படித்தானே நீங்கள் கூறினீர்கள்?” என்று சாடினார்.
துவாங்கு முஹ்ரிசின் இக்கடுமையான பேச்சுக்குத் திரு இஸ்மாயில் லாசிம் பதில் ஒன்றும் கூறவில்லை. அவர் அரச பரம்பரையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘அங்காட் செம்பா’ எனும் பாரம்பரிய முறையில், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கத்தை மட்டும் தெரிவித்தார்.
