மாஸ்கோ: உக்ரேனின் டோன்பாஸ் வட்டாரத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் மாஸ்கோ கைப்பற்றும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியிருக்கிறார்.
உக்ரேனியப் படையினர் அங்கிருந்து விலகிச் செல்லவில்லை என்றால் படைபலத்தின் மூலம் அந்த வட்டாரத்தை ரஷ்யா தனது கட்டுக்குள் கொண்டுவரும் என்று வியாழக்கிழமை (டிசம்பர் 4) அவர் தெரிவித்தார். உக்ரேன், அதனை நிராகரித்தது.
2022ஆம் ஆண்டு திரு புட்டின் உக்ரேனுக்குள் ஆயிரக் கணக்கான படையினரை அனுப்பினார். டோன்பாஸ் வட்டாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் எட்டாண்டாக நீடித்த போருக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் உக்ரேன் மீது படையெடுத்தார். டோன்பாஸ் வட்டாரத்திற்குள் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் இருக்கின்றன.
உக்ரேன், தனது சொந்த நிலப்பகுதியை ரஷ்யாவுக்குப் பரிசாகக் கொடுக்க விரும்பவில்லை என்றது. போர்க்களத்தில் மாஸ்கோவால் வெற்றிபெற முடியவில்லை என்று அது கூறியது. போரைத் தொடங்கியதற்காக ரஷ்யாவுக்குப் பரிசு கொடுக்க முடியாது என்றார் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
ரஷ்யா, தற்போது உக்ரேனிய நிலப்பகுதியில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. கிரைமியா, லுஹான்ஸ்க் வட்டாரங்கள் முழுமையாக ரஷ்யாவின் வசம் உள்ளன. டொனெட்ஸ்க் வட்டாரத்தில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பகுதியை அதன் பிடிக்குள் வைத்திருக்கிறது ரஷ்யா.
டொனெட்ஸ்க்கின் சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதி தொடர்ந்து உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுடன் மாஸ்கோ பேசி வருகிறது. டோன்பாஸ் வட்டாரம் முழுமையும் தனது கட்டுக்குள் வரவேண்டும் என்று ரஷ்யா மீண்டும் மீண்டும் அதனிடம் கூறியுள்ளது. அதனை வாஷிங்டன் அங்கீகரிக்க வேண்டும் என்று மாஸ்கோ எதிர்பார்க்கிறது.
உக்ரேன் குறித்த அமெரிக்காவின் பரிந்துரைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார் திரு புட்டின். பேச்சுகள் தொடர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

