கியவ்: ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் வியாழக்கிழமை (நவம்பர் 7) உக்ரேனின் கியவ் நகரைத் தாக்கியுள்ளன.
கட்டடம் ஒன்றுக்குச் சேதம் ஏற்பட்டதாகவும் வாகனக் கூடங்கள் தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
உக்ரேனியத் தலைநகரில் நள்ளிரவுக்குப் பிறகு ஆகாயத் தற்காப்புகள் செயல்பாட்டில் இருந்தன.
‘ஹொலொசீவ்ஸ்கி’ மாவட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்று கடும் சேதமடைந்ததாகவும் வாகனக் கூடங்கள் தீப்பிடித்துக்கொண்டதாகவும் கியவ்வின் ராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி பொப்கோ கூறினார்.
கீழே விழுந்த உடைந்த துண்டுகள் தீ ஏற்படக் காரணமாக இருந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ கூறினார். அவசரநிலை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கியவ்விலும் உக்ரேனின் மத்திய, தென் பகுதிகளின் பல இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கைகள் நடப்பில் இருந்தன.

